Aran Sei

குஜராத்தில் கொரோனா பரப்பிய பாஜகவின் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி – காங்கிரஸ் குற்றச்சாட்டு

டந்தாண்டு ஜனவரியில் கொரோனா தொற்றுக் குறித்து அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்தும், பாஜக தலைமையிலான குஜராத் அரசு ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை நடத்தியது என்று குஜராத் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அமித் சவ்தா கூறியுள்ளார்.

நேற்று (மார்ச் 6), குஜராத் சட்டசபையில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தின் உரைமீதான தீர்மானத்திற்கு பதிலளித்துப்  பேசிய அமித் சவ்தா,  “கொரோனா தொற்றின் பரவல் சீனாவில் தொடங்கியபோது, ​​உலக சுகாதார அமைப்பானது அனைத்து நாடுகளையும் எச்சரித்தது. இந்திய அரசும் மாநிலங்களை எச்சரித்தது. அதைத்தொடர்ந்து, கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியன்று குஜராத் சுகாதாரத்துறை ஆணையர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். மருத்துவமனைகளும் மருத்துவ ஊழியர்களும் கொரோனாவுக்கு எதிராக போராட தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.” என்று அந்நிகழ்வுகளை மேற்கோள்காட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘குற்றச்சாட்டிற்கு ஆதாரம் எதுவும் இல்லை’ – தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை

மேலும் அச்செய்தியில், “இவற்றையெல்லாம் மீறி கடந்தாண்டு பிப்ரவரி மாத இறுதியில் ’நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியை குஜராத்தில் நாம் நடத்தினோம். மக்கள் அப்பெருந்தொற்றுக் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டியிருந்த சமயம் அது. ஆனால், ​​எந்தவொரு மருத்துவ பரிசோதனையும் இல்லாமல் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பங்கேற்றார்கள். தனிமைப்படுத்துதல் போன்ற அடிப்படை தொற்றுத் தடுப்பு  நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. குஜராத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பேருந்துகளில் மக்கள் அழைத்து வரப்பட்டு, நரேந்திர மோடி மைதானத்தில் அமர்த்தப்பட்டனர். இதன் விளைவாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தன.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொரோனா தொற்றுத் தொடர்பான புள்ளிவிவரங்களை மறைக்க குஜராத் மாநில அரசு முயன்றதுடன், தீவிரமடைந்து வரும் நிலைமைகுறித்து தங்களுடைய அச்சத்தை வெளிப்படுத்திய அதிகாரிகளைப் பணிமாற்றம் செய்தது. குஜராத்தில் இறப்பு விகிதம் நாட்டிலேயே மிக அதிகமாக இருந்தபோது, அதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக, புள்ளிவிவரங்களை மறைக்கும் வேலையை குஜராத் அரசு செய்துக்கொண்டிருந்தது.” என்று அமித் சவ்தா குற்றஞ்சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

தப்லிகி ஜமாத் வழக்கு – சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கர்ப்பிணிப் பெண்

மேலும், குஜராத் உயர்நீதிமன்றமே தலையிட்டு, தனியார் ஆய்வகங்களில் கொரோனா தொற்றுக்கான சோதனைக்கு வசூலிக்கப்படும் விலையைக் குறைக்குமாறு மாநில அரசிடம் கோரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மாநில மக்களின் பயண குறித்த சான்றுகளைக் கண்காணிக்குமாறும், முக்கியமாக கடந்த 14 நாட்களில் சீனாவுக்குச் சென்று வந்தவர்கள் காணக்கிடைத்தால், உடனடியாக தொற்று தடுப்பு குழுவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் ஆணைட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்