Aran Sei

குஜராத் கலவர வழக்கு; நரேந்திர மோடியை விடுவித்தது தவறு- உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் காரசார வாதம்

குஜராத் கலவரத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் கலவரக்காரர்களுக்கு இடையில் இருந்த கூட்டணியை சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கவே இல்லை என்று கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜாஃப்ரியின் மனைவி சாக்கியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குஜராத் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடி உட்பட 64 பேர் மீது குற்றம் இல்லை என்று கூறி, சிறப்பு விசாரணைக் குழு அவர்களை விசாரணையிலிருந்து விடுவித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சாக்கியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு புதன்கிழமையன்று (17.11.21) விசாரணைக்கு வந்தபோது, சாக்கியா சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “இப்படியொரு கூட்டணி அமைந்திருந்ததற்கு தெளிவான ஆதாரங்கள் இருந்தன. அதிகாரிகள் இந்த கூட்டணியில் இணைந்திருந்தனர். அனைவரும் இல்லாவிட்டாலும் முக்கியமான அதிகாரிகள் இந்த கூட்டணியில் இருந்தனர். அரசியல்வாதிகளும் இதில் இணைந்திருந்தனர். அந்தக் கூட்டணியில் விஷ்வ இந்து பரிஷித், பஜ்ரங்தள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளும் இணைந்திருந்தன. இதுவே, குற்றம்சாட்டப்பட்டகளுடன் கூட்டணியில் இருந்த அப்பட்டமான கதை” என்று சாக்கியா தரப்பு வாதத்தை முன் வைத்ததாக லைவ் லா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறப்பு விசாரணைக் குழு (SIT) குறித்து கபில் சிபல் முன்வைக்கும் குற்றச்சாட்டின் தீவிரத்தை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், உண்மையில் நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட விசாரணைக்குழு மீது இந்த குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டுள்ள லைவ் லா அதற்கு அவ்வாறே தான் வாத்தை முன்வைத்ததாக கபில் சிபல் பதில் அளித்தாகவும் குறிப்பிட்டுள்ளது.

நீதிபதி கன்வில்கர் தலைமையில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் கபில் சிபலிடம் “கீழ் மட்ட காவல்துறையினர் களத்தில் இருந்தவர்களுடன் கூட்டணியில் இருந்தார்கள் என்றால் அதை புரிந்துகொள்ள முடிகிறது. அதுகுறித்து விசாரிக்க வேண்டும். ஆனால், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு மீது நீங்கள் எப்படி குற்றம்சுமத்த முடியும்? இந்த வாதத்தை வைப்பதற்கு நாங்கள் அனுமதியளித்தால், சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த நீதிமன்றத்திற்கே எதிரானதாக இருக்கும். இதைத்தான் நீங்கள் வாதமாக முன்வைக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியதாக லைவ் லா குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதில்அளித்த கபில் சிபல் “நீதிபதிகள் என்னை மன்னிக்க வேண்டும். இதைத்தான் என் வாதமாக நான் முன்வைக்கப்போகிறேன்” என்று கூறியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து குஜராத் கலவரம் தொடர்பான பிற வழக்கில், விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையும், அப்போது விசாரணைக் குழு மீது இதுபோன்ற குற்றச்சாட்டு வைக்கப்படாததையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் “நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு மீது (குற்றம்சாட்டப்பட்டவர்களுடன்) ‘கூட்டணி’ வைத்தார்கள் என்று கூறுவது மிகப்பெரிய குற்றச்சாட்டு. நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு உள்நோக்கம் கற்பிப்பதாகும்” என்றும் கூறியதாக லைவ் லா குறிப்பிட்டுள்ளது.

இதற்குப் பதில் அளித்த கபில் சிபல் “தெஹல்கா வீடியோக்கள் பற்றி சிறப்பு விசாரணைக் குழுவிற்கு நன்றாக தெரியும். குஜராத் உயர்நீதிமன்றம் அந்த வீடியோக்களின் உண்மை தன்மையை உறுதி செய்ததும் அவர்களுக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதத்தை சிறப்பு விசாரணைக் குழு எப்படி ஏற்றுக்கொண்டது? இந்த கேள்வி மிகச் சாதாரணமாக எல்லோருக்கும் எழக்கூடிய ஒன்று. சிறப்பு விசாரணைக் குழு, கூட்டணி வைத்துக்கொண்டு சிலரை காப்பாற்றியுள்ளது என்பதை இது காட்டவில்லையா?” என்று கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தன் வாதத்தை முன்வைத்த கபில் சிபல், குற்றச்சாட்டிற்கான தெளிவான ஆதாரங்கள் இருந்தும் சில அதிகாரிகள் மீது சிறப்பு விசாரணைக் குழு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த சமயத்தில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய யாரும் தண்டிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் “இந்த வழக்கில் உண்மையில் நீதிக்குதான் தண்டனை கிடைத்துள்ளது” என்று கூறிய கபில் சிபல் “இது இந்த அமைப்பின் தோல்வி” என்றும் கூறியதாக லைவ் லா தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தன் வாதத்தை முன்வைத்த கபில் சிபல் தேசிய மனித உரிமை ஆணையம் சமர்ப்பித்த ரகசிய அறிக்கையை சிறப்பு விசாரணைக் குழு ஏன் விசாரிக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பியதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, அகமதாபாத் நகரில் உள்ள குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜஃப்ரி உட்பட 68 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் குற்றம்சாட்டப்பட்ட நரேந்திர மோடி உட்பட 63 பேர் மீதான குற்றச்சாட்டிற்கு எந்த ஆதரமும் இல்லை என்று கூறி 2012 ஆம் ஆண்டு சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதை எதிர்த்து சாக்கியா ஜஃப்ரி தாக்கல் செய்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்