தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததை காரணம் காட்டி ஏன் உங்களை பணி நீக்கச் செய்யக் கூடாது என விமானப்படை அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது, இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் விளக்கமளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் ஜாம்நகர் பிரிவில் அதிகாரியாக பணிபுரிபவர் யோகேந்தர் குமார். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி யோகேஷ் குமார் அவரது உயரதிகாரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என விமானப்படையில் இருந்து கடிதம் வந்தது. ஆனால், எனக்குத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தயக்கம் உள்ளது” என தெரிவித்திருந்தார்.
”தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மரணங்கள் நிகழ்வதாக வந்த செய்திகள் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் ஒன்றிய அரசின் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துத்துள்ள மருந்துகளை உட்கொண்டு வருகிறேன். மேலும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி வருகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், ஏன் உங்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என விமானப்படையிடம் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் பணி நீக்கம் செய்வது சட்ட விரோதம் மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 21 வது பிரிவுகளுக்கு எதிரானது என அவர் தெரிவித்திருந்தார்.
யோகேஷ் குமாரின் விளக்கத்தை ஏற்க விமானப்படை மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து விமானப்படை அளித்துள்ள நோட்டீஸை எதிர்த்து யோகேஷ் குமார் குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஜே. தேசாய் மற்றும் ஏ.பி. தாக்கர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறும் விமானப்படை மற்றும் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புயுள்ளது.
மேலும், ஜூலை 1 ஆம் தேதிவரை யோகேஷ் குமார் பணி நீக்கம் தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என விமானப்படை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.