கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பயன்படுத்தும் ஆக்சிஜன் செறிவூட்டிக்கு (Oxygen Concentrators) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி நீதிமன்றம் முன் வைத்த கோரிக்கைக்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த மூத்த குடிமகன் ஒருவர், வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய உறவினரிடமிருந்து ஆக்சிஜன் செறிவூட்டியை அன்பளிப்பாக பெற்றுள்ளார். இந்தச் சூழலில் கடந்த மே 1 ஆம் தேதி, மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை 12 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தியிருந்தது. எனவே, இந்த வரி விதிப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21க்கு (வாழ்வதற்கான உரிமை) எதிராக இருப்பதாக, அந்த நபர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கொரோனா தொற்று பரவல் குறையும் வரை, ஆக்சிஜன் செறிவூட்டி போன்ற கருவிகளுக்கு விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சகம், ”மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டால், இது பல்வேறு பாதிப்புகளையும் கருத்துக்களையும் சமூகத்தில் உருவாக்கும். இதற்குப் பின்பு மக்கள், சொத்து வரி, உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி போன்றவற்றிலிருந்தும் விலக்கு கேட்கத் தொடங்குவார்கள். சொத்து வரி, உணவு வரி போன்றவையும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ன் கீழ் தான் வருகிறது“ என்று தெரிவித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
கொரோனா எதிரொலி: புதிய சட்டமன்றம் கட்டும் பணி உடனடியாக நிறுத்தம் – சத்தீஸ்கர் அரசு உத்தரவு
மேலும், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு போதுமான வரிவிலக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது என்றும், தனிப்பட்ட தேவைக்காக ஆக்சிஜன் செறிவூட்டியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் அளவுக்கு வசதி படைத்திருகும் நபர், 12 % அதிகமான சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்த கூடியவர் என்றும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தின் காப்புரிமை – இந்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு
எனவே, “ஆக்சிஜன் செறிவூட்டிக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-க்கு எதிரானது இல்லை” என்றும் அரசு தரப்பில் முறையிட்டுள்ளது.
கொரோனா தொற்று தொடர்பான பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்வைத்த கோரிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸிஜன் செறிவூட்டி என்பது காற்றிலிருந்து ஆக்ஸிஜனை சேகரிக்கும் ஒரு இயந்திரமாகும். இந்த ஆக்ஸிஜன் மூக்கு வழியாக ஒரு குழாய் மூலம் உடலுக்குள் செல்கிறது. இதிலிருந்து வெளியாகும் ஆக்ஸிஜன் 90 முதல் 95 சதவிகிதம் வரை சுத்தமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.