ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான நம்பிக்கையான உறவை நச்சுத்தன்மையான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் சிதைத்துள்ளதாகக் கூறி, மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களுக்கு ஒன்றிய அரசு முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுடன்தான் வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் ஆரம்பத்தில் இருந்தே மாநிலத்திற்கும் ஒன்றியத்திற்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கையை சிதைத்து வருகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் கடுமையாகவும் வருத்தமளிக்கும் வகையிலும் கிட்டத்தட்ட நச்சுத்தன்மையுள்ளதாகவும் மாறியது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது.” என்று அமித் மித்ரா தெரிவித்துள்ளார்.
“இதனால், கூட்டாட்சி முறையின் ஏற்பட்டுள்ள சிதைவை பலரும் கவனித்து வருகின்றனர். மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசிற்கும் இடையில் கூர்மையான முரண்கள் வளர்ந்த பல தருணங்கள் உள்ளன. ஆனால், பின்னர் அவை ஒரு கசப்பாகவோ அல்லது விரோதமாகவோ மாறவில்லை. ஆனால், இதுபோன்ற மிகவும் எளிமையான விஷயங்களுக்காக கூட ஒருமித்த கருத்துக்கு நாம் வருவது, இப்போது கடினமான ஒன்றாக மாறிப்போனதை நினைத்து நான் பயப்படுகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
“மாநிலங்களுக்கு இது ஒரு ஆபத்தான நேரம். ஏனெனில் மாநிலங்களின் சொந்த வளங்கள் ஜிஎஸ்டி-யால் மிகுந்த துன்பத்தில் உள்ளன. திட்டமிடப்பட்ட வருவாய்க்கும் கிடைத்த வருவாய்க்கும் இடையிலான வித்தியாசம் ரூ.2.75 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், 2020-21 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய உண்மையான இழப்பீடு ரூ.74,398 கோடியை எட்டியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலில் நந்தன் நிலேகனி தெரிவித்தப்படி, மோசடி பரிவர்த்தனைகள் ரூ. 70,000 கோடியை எட்டியுள்ளன.” என்று மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா தன் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.