Aran Sei

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு : பொருளாதார மறுமலர்ச்சியல்ல – பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்

Image Credits: World Finance

2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் இதுவரை இல்லாத வகையில் உயர்ந்து ரூ.1.15 லட்சம் கோடியைக் கடந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி வசூல் நடைமுறைக்கு வந்ததில் இருந்து அதிகபட்ச வரி வசூல் என்பது கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.1.13 லட்சம் கோடியாக இருந்தது.

அதன்பிறகு இந்த அளவு வரிவசூலைத் எப்போதும் தொட்டதில்லை. ஆனால், கடந்த டிசம்பர் மாதம் இதுவரை இல்லாத வகையில் ரூ.1.15 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தைவிடத் தற்போது 12 சதவீதம் கூடுதல் வரி வசூல் ஆகியுள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாகக் கடந்த 3 மாதமாக ஒரு லட்சம் கோடிக்கு மேல் வரி வசூலாகியுள்ளது. 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1.05 லட்சம் கோடி, நவம்பர் மாதத்தில் ரூ.1.04 லட்சம் கோடி வசூலித்த நிலையில், டிசம்பர் மாதத்தில் ரூ.1.15 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

மத்திய ஜிஎஸ்டிவரி ரூ.21,365 கோடியாகவும, மாநில ஜிஎஸ்டி வரி ரூ.27,804 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.57,426 கோடியாகவும், செஸ்வரி ரூ.8,579 கோடியாகவும் இருக்கிறது.

வசூலின் அதிகரிப்பிற்கு பண்டிகைக்கால தேவை, விற்பனை, பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்பிவருவது போன்ற பல கரணங்கள் கூறப்படுகின்றன.

இது தொடர்பாக அரண்செய்-யுடன் பேசிய பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், “ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருப்பதாலேயே இதைப் பொருளாதார மறுமலர்ச்சி என்று கூற முடியாது. இது ஒரு குறியீடு மட்டுமே, இதுவே பொருளாதார மறுமலர்ச்சி அல்ல” என்று கூறினார்.

“பொதுமுடக்கம் தளர்வு செய்யப்படும் போது முன்னர் இருந்தது போலவே ஒரு தேவை ஏற்படும், அதன் விளைவாக இது நடைபெறும். இது தொடருமா என்பதுதான் இப்போது உள்ள கேள்வி. இதற்குத் தேவை அதிகரிப்பு (pent up demand) என்று பெயர். இதற்கு ஏற்றார் போல் உற்பத்தி நடைபெறுகிறதா என்று பார்க்க வேண்டும். இது விநியோகத்தால் மட்டும் நடைபெற்றுள்ளது என்றால் முன்னதாகவே தயாரித்ததை இப்போது விநியோகிக்கிறார்கள் என்று அர்த்தம்” எனவும் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்  தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்