தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 23 சுங்கச் சாவடிகளில் வரும் செப்டம்பர் 1 முதல் சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தில் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் முதல்கட்டமாக 24 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக 23 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படப்போகும் விளைவுகள் எதனையும் சிறிதும் சிந்திக்காமல் வணிக நோக்கோடு தனது பார்வையை செலுத்தியுள்ளது ஒன்றிய பாஜக அரசு”. என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கொரோனா முடக்கம் மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது விலைவாசி உயர்வை மேலும் அதிகரிக்கும்”. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான சுங்க சாவடிகளில் முறையான சாலை பராமரிப்பு இல்லாமல் உள்ளது என்றும் , வாகனங்கள் அதிகமாகும்பொழுது அதன் அடிப்படையில் கணக்கிட்டு சுங்க கட்டணத்தைக் குறைத்து வசூலிக்க வேண்டும் என்ற சுங்க சாவடிகளுக்கான நிபந்தனையும் பின்பற்றப்படவில்லை என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.
இந்நிலையில், “நெடுஞ்சாலை உருவாக்கத்தில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள், பராமரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் ஆகியன சுங்க கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும்? காலக்கெடு என்ன? என்பதற்கான எந்த வரையறையுமின்றி சுங்கக் கட்டணம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை வரைமுறையின்றி நாடு முழுவதும் தொடர்கிறது”. என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே , சுங்கக் சாவடி கட்டண வசூலிப்பை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முறைப்படுத்தி, நெடுஞ்சாலைகள் பராமரிப்பை தனியாரிடமிருந்து விடுத்து அரசே ஏற்று நடத்தி சுங்கச்சாவடி இல்லாத சாலையாக நெடுஞ்சாலைகளை மாற்ற வேண்டும் என்றும், தமிழக சுங்கச் சாவடிகளில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.