Aran Sei

“பக்கவிளைவு ஏற்பட்டால் நிறுவனம் இழப்பீடு வழங்கும்” – கோவாக்சின் எடுத்தவர்களிடம் பெறப்பட்ட கையெழுத்து

பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவாக்சின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டவர்களிடம், மருத்துவ சோதனை செய்வதற்கான ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தரவுகளை வெளியிடும் வரை கோவாக்சினை எடுத்துக்கொள்ள மாட்டேன் – தடுப்பு மருந்து நிபுணர் ககன்தீப் கங்

இந்தியாவில் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பு மருந்து வழங்கும் பணி இன்று (16.01.21) முதல் தொடங்கியுள்ளது. சீராம் இந்தியா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு மருந்துகளுக்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டுக் கழகம் அவசர அனுமதி வழங்கியுள்ளது.

இந்த இரண்டு மருந்துகளில் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பொதுமக்கள் முடிவு செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பு மருந்திற்கு, மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை முடிவடையும் முன்னரே, அவசர அனுமதி வழங்கப்பட்டதற்கு, காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்கட்சிகளும், மருத்துவ வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘கோவாக்சின்’ எடுத்துக்கொண்டவர் மரணம் – தடுப்பு மருந்து காரணமில்லை என்று பாரத் பயோடெக் விளக்கம்

ஆனால், மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை முடிவடையாவிட்டாலும், கோவாக்சின் மருந்து பாதுகாப்பானது என்று மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது. அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ள இரண்டு தடுப்பு மருந்துகளும் 110% பாதுகாப்பானது என்று, இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின் தலைவர் வேணுகோபால் சோமானி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றைய தினம், கோவாக்சின் மருந்தை எடுத்துக் கொண்டவர்களிடம் மட்டும், மருத்துவ பரிசோதனை செய்யும் படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மருத்துவ சோதனை அடிப்படையில், இந்த மருந்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று, அந்த படிவத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு, ஆபத்தான பக்கவிளைவு ஏற்படும்பட்சத்தில், அது தடுப்பு மருந்தினால்தான் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டால், நிறுவனம் அதற்கு இழப்பீடு வழங்கும் என்றும் அந்த படிவத்தில் உறுதி மொழி வழங்கப்பட்டிருந்ததாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து : பாஜகவின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு – சு.வெங்கடேசன்

“மருத்துவ செயல்திறன் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையில் அது குறித்து ஆராயப்பட்டு வருகிறது” என்றும் “…இருந்தபோதும், அவசரகாலத்தில், பொதுமக்களின் நன்மை கருதி, கோவாக்சின் தடுப்பு மருந்தை கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு விநியோகிக்கவும், விற்பனை செய்யவும், மத்திய அரசின் உரிமம் வழங்கும் அமைப்பு, அவசர கால அமனுதி வழங்கியுள்ளது” என்றும் அந்த படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறுகிறது.

மேலும் அந்த படிவத்தில், தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டவர்கள் வழங்கிய தகவல்கள், அரசால் சேகரித்து வைக்கப்படும் என்றும், அந்த தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவை என்றும் அவை குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்