Aran Sei

ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்க வேண்டும் – உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த தெய்வத்தமிழ்ப் பேரவை

ஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி தஞ்சையில் மே 8 அன்று பெருந்திரள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெய்வத் தமிழ்ப்பேரவை அறிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற தெய்வத் தமிழ்ப் பேரவையின் அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ,ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்வின் நடவடிக்கைக்கு எதிராகவும், ஈஷா அறக்கட்டளையை அரசுடமை ஆக்க வேண்டுமெனவும் கோரி மூன்று தீர்மானங்களையும் நிறைவேற்றியுள்ளனர்.

`ஈஷா விழாக்களை தடை செய்ய வேண்டும்’ –  வழக்கறிஞர் எம்.வெற்றிச்செல்வன்

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், சித்தர் மூங்கிலடியார் (பதிணென்சித்தர் கருவூறார் சித்தர் பீடம்), குச்சனூர் கிழார் (வடகுரு மடாதிபதி, இராசயோக சித்தர் பீடம், குச்சனூர், தேனி மாவட்டம்), சத்தியபாமா (நிறுவனர் – சத்தியபாமா அறக்கட்டளை), வழக்கறிஞர் ச. செந்தில்நாதன் (சென்னை உயர் நீதிமன்றம்), மோகனசுந்தரம் சுவாமிகள் (திருவில்லிப்புத்தூர் தெய்வத்தமிழ் ஆன்மீகர்), இறைநெறி இமயவன் (தெய்வத்தமிழ்க் கூடல், குடந்தை) ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்களும் எண்ணற்ற தமிழின உணர்வாளர்களும் பங்கேற்று உள்ளனர்.

தெய்வத்தமிழ்ப் பேரவையின் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தில், இந்திய அரசின் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் ஆதியோகி சிலையும், அதையொட்டி நிறுவப்பட்ட பல்வேறு கட்டடங்களும் சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்கள் என்பதை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், மேலும் ஈஷா மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்துள்ளதாகவும், ஈஷா மையத்தில் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படுவதை குறிப்பிட்டு அவற்றை நிறுத்திக் கொள்ளுமாறு மே 2017லேயே அறிவிப்பாணை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜக்கியின் காவிரி அழைக்கிறது திட்டம் அரசின் திட்டமா ? – கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி

மேலும், ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலையை ஒட்டியுள்ள 109 ஏக்கர் பரப்பளவில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் இருப்பதாகவும், அவற்றை இடித்துவிட்டு, அந்த நிலங்களை மலைவாழ் பழங்குடி மக்களிடம் திரும்ப அளித்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளதாகவும், ஆனால் ஈஷா அறக்கட்டளை அதைப் பொருட்படுத்தாததை குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் கூறியதாகவும் அந்தத் தீர்மானம் கூறுகிறது.

அதுமட்டுமல்லாது, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி “காவிரி கூக்குரல்” (Cauvery Calling) என்ற பெயரில் நிதி மோசடி நடந்திருப்பதாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருவதாகவும் தெய்வத் தமிழ்ப் பேரவையின் தீர்மானம் தெரிவிக்கிறது.

தமிழக கோயில்களை மீட்க வேண்டும் – ஜக்கிக்கு ஆதரவாக களமிறங்கிய நகைச்சுவை நடிகர் சந்தானம்

இந்நிலையில், எண்ணற்ற சட்டமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஈஷா மையம் அறக்கட்டளையைத் தமிழ்நாடு அரசு ஏற்று இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதி 3-இன் கீழ் அரசுடைமையாக்க வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், சமீபகாலமாக இந்து சமய அறநிலையத்துறையை கலைத்துவிட்டு கோவில்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டுமென ஜக்கி வாசுதேவ் கூறிவருவது குறித்து இயற்றப்பட்ட தீர்மானத்தில், “இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை சரி செய்ய முயல வேண்டுமே தவிர, அறநிலையத்துறையையே கலைத்துவிட வேண்டும் என்பது வர்ணாசிரம ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சித் திட்டமாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

‘பக்தர்கள் கையில் கோவில்’ என்பது ஜக்கியின் கருத்தல்ல, பாஜக கருத்து – கொளத்தூர் மணி

மேலும் , ஜக்கி வாசுதேவ் முன்மொழிந்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதி வழிமொழிந்துள்ள தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறையைக் கலைக்கும் திட்டத்தை தமிழக மக்கள் முறியடிக்க வேண்டுமென்றும் தெய்வத் தமிழ்ப் பேரவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் ,தமிழ்நாட்டுக் கோயில்களில் குடமுழுக்கு நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, அன்றாடப் பூசைகளும், வழிபாடுகளும் தமிழ்வழியில், தமிழ்த் திருமுறைகளையும், மந்திரங்களையும் மட்டுமே பயன்படுத்துவத்தை இந்து சமய அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெய்வத் தமிழ்ப் பேரவை தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் இயற்றியுள்ளது.

இந்நிலையில் ,மேற்கண்ட கோரிக்கைகளைத் தமிழக அரசு நடைமுறைபடுத்த வேண்டி ஆன்மிகர்கள், அடியார்கள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் தஞ்சையில் வரும் 08.05.2021 அன்று ஒருநாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவருமான பெ. மணியரசன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்