Aran Sei

பேரறிவாளன் விடுதலையில் உச்சநீதிமன்ற கெடு முடிந்தும் ஆளுனர் முடிவெடுக்காதது அநீதி: ராமதாஸ் குற்றச்சாட்டு

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 12 நாட்களாகியும் அதுகுறித்து இன்று வரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை என்றும் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுனர் மேலும் ஒரு முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காதது மிகவும் வேதனையளிக்கிறது என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

’எல்ஐசி உள்ளிட்ட அரசு நிதி நிறுவனங்களின் பங்குகளை ரூ.1.75 லட்சம் கோடிக்கு விற்க இலக்கு’ – நிர்மலா சீதாராமன்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு அடுத்த நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட மத்திய அரசு, 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரைமீது ஆளுனரே முடிவெடுக்கலாம்; அடுத்த 4 நாட்களுக்குள் இதுபற்றி ஆளுனர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தது. அதற்கு அடுத்த நாள் பேரறிவாளன் தரப்பின் கோரிக்கைப்படி, இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், ஒரு வாரத்திற்குள் ஆளுனர் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது” என்று கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் அளித்த வாக்குறுதியின்படி கடந்த 25-ஆம் தேதிக்குள் பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற ஆணைப்படி முடிவெடுப்பதாக இருந்தாலும் கூட 28-ஆம் தேதிக்குள் ஆளுனர் தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால், கெடு முடிந்து நான்கு நாட்களாகியும் கூட எந்த நகர்வும் நடக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், அதற்கான காரணத்தையும் ஆளுனர் மாளிகை இதுவரை தெரிவிக்கவில்லை என்றும் இந்தத் தாமதம் பெரும் மனித உரிமை மீறல் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

’இந்திய தேசிய ரயில் திட்டம்; 118 கி.மீ தூரத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் பாதை’ – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

எழுவரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை தீர்மானத்தைத் தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தும், இரண்டு ஆண்டுகளாக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது ஆளுனர் முடிவெடுக்காததை எதிர்த்துத் தான் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது ராஜிவ் கொலைச்சதி குறித்து நடைபெற்று வரும் பல்முனை கண்காணிப்பு குழுவின் (எம்.டி.எம்.ஏ) விசாரணை அறிக்கையை ஆய்வு செய்தபிறகு தான் இதுகுறித்து ஆளுனர் முடிவெடுப்பார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், எம்.டி.எம்.ஏ விசாரணை அறிக்கைக்கும், 7 தமிழர் விடுதலைக்கும் தொடர்பில்லை என்றும், இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என்றும் கூறியதையும் நினைவு கூர்ந்தார்.

மத்திய அரசின் பட்ஜட்: இந்திய மக்களுக்கு சொல்லும் சேதி என்ன?

“ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுனருக்கு பரிந்துரை செய்யப்பட்டு 875 நாட்கள் கடந்து விட்ட நிலையில், இத்தனை நாட்களாக நடத்தாத எந்தச் சட்ட ஆலோசனையை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆளுனரின் செயலர் நடத்தினார்? எனத் தெரியவில்லை. இவை அனைத்தும் பேரறிவாளன் விடுதலையை தாமதப்படுத்தும் செயல் என்பதைத் தவிர வேறல்ல. ஆளுனரின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது” என்று பாமக நிறுவனர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நபிகளை இழிவுப்படுத்தி பாஜக கல்யாண ராமன் பேச்சு: இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை தொடர்ந்து கைது

“30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடி, தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியை இழந்து விட்ட 7 தமிழர்களின் விடுதலையை இனியும் தாமதிப்பது சரியல்ல. எனவே, பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு அடுத்த 3 நாட்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவரையும், அவரைத் தொடர்ந்து மற்ற 6 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைக்குத் தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக” பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்