Aran Sei

இரண்டாண்டில் 10 மடங்காக உயர்ந்த பெட்ரோல், டீசல் வரி – வரிகளை குறைக்க மத்திய அரசுக்கு எதிர்கட்சிகள் கோரிக்கை

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரிகளை குறைத்து, சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

நேற்று (மார்ச் 24) மாநிலங்களவையில் நிதி மசோதா, 2021 மீதான விவாதத்தில் பேசிய பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த  சுஜீத் குமார், கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசால் 10 மடங்கு செஸ் மற்றும் கூடுதல் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் இது கூட்டாட்சி முறைக்கே எதிரானது என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், உண்மையில் இந்த வரிவிதிப்பானது நம் நாட்டின் கூட்டாட்சி முறை மீது நிகழ்த்தப்படும் நேரடி தாக்குதலாகும் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை – அரசுக்கு வருவாய் இழப்பில்லாமல் லிட்டருக்கு ரூ 8.5 வரி குறைக்க முடியும்

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய அரசின் வரிகளைக் குறைப்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கோரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த அப்துல் வஹாப், “மன்மோகன் சிங் ஆட்சியின்போது, ​​ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 160 அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், இப்போது அது 65 அமெரிக்க டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் 60-70 இந்திய ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்கின்றார்கள். ஆனால், இந்தியாவிலோ ரூ .100 க்கு விற்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 24), மாநிலங்களவையில் பேசிய பாஜகவை சேர்ந்த சுஷில் குமார் மோடி, “மத்திய, மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளின் வழியாக ரூ.5 லட்சம் கோடி வசூலிக்கின்றன. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வர முடியாது. ஏனென்றால், ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்க எந்த மாநிலமும் தயாராக இருக்காது.” என்று தெரிவித்திருந்தார்.

“வரிவருமானம் குறையுமென்பதால், 10 ஆண்டுகளுக்கு பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் வராது” – சுஷில் குமார் மோடி

மேலும், தற்போதைய வரிவிதிப்பின்படி, பெட்ரோல் அல்லது டீசல் விலை லிட்டர் ரூ .100 என்றால், மொத்த வரி ரூ .60-யில் மத்திய அரசிற்கு ரூ .35-ம், அந்தந்த மாநிலங்களுக்கு ரூ .25-ம் கிடைக்கும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குமார் மோடி குறிப்பிட்டிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்