Aran Sei

“அதானியின் கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் திட்டத்திற்கான கண்துடைப்பு கருத்துக் கேட்பினை ரத்து செய்ய வேண்டும் என்றும் கார்ப்பரேட் கொள்ளைக்கு அரசு துணைபோகக் கூடாது என்றும்  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுகம், முன்பு எல் அண்ட் டி நிறுவனத்தால் 330 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிறு துறைமுகமாக, சில ஏற்றுமதிக்காக மட்டும் அனுமதி பெற்று 2012-ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்தது. எல்அண்ட் டி நிறுவனத்தின் சிறிய துறைமுகத்தை 2018-ல் அதானி குழுமம் வாங்கியது. அதனை ஒரு பெரும் வர்த்தக துறைமுகமாக சுமார் 6000 ஏக்கர் அளவில் விரிவாக்கம் செய்ய அதானி குழுமம் திட்டம் தயாரித்துள்ளது. சுமார் 53 ஆயிரம் கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த துறைமுகத்தின் சுற்றுச்சூழல், சூழல் தாக்க மதிப்பு ஆய்வு அறிக்கையை வெளியிடபட்டுள்ளது.

‘காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ‘கார்ப்பரேட் அரசு’ கைவிட வேண்டும்’ – திருமாவளவன்

இந்த அறிக்கை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அதில், “அறிக்கைகள் முழுமையாக தமிழில் மக்களிடம் கிடைக்க வழிவகை செய்யாமல் கருத்துக் கேட்பு கூட்டம் 2021 ஜனவரி 22 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்கள் அதிகமாகவுள்ள காட்டுப்பள்ளியில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் மீஞ்சூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் சூழ்நிலையில் அவசர, அவசரமாக இந்தக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வியும் எழுந்துள்ளதாக” தெரிவித்துள்ளது.

’ அதானி குழுமத்துக்காக சுற்றுச்சூழலை பலி கொடுக்கும் அதிமுக – பாஜக அரசுகள்’ : ஸ்டாலின் விமர்சனம்

பல நிபுணர்களும், மக்கள் பிரதிநிதிகளும் இந்தத் துறைமுக திட்டம் சட்டத்திற்கு புறம்பானது எனவும், அரசின் சுற்றுச்சூழல் மண்டல விதிகளுக்கும் புறம்பானது எனவும் ஆதாரப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளதாகவும், துறைமுக விரிவாக்கம் நடைபெற்றால், மீதம் இருக்கின்ற கடற்கரையும் அரிக்கப்பட்டுவிடும் என்றும், கொற்றலை ஆறு கடலோடு கலந்துவிடும் அபாயம் உள்ளது எனவும் மக்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் எண்ணூர் -பழவேற்காடு மக்கள் வாழ்வாதாரம் இந்தத் திட்டத்தால் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளதாகவும், இதனால் இந்த திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்பது மக்களின் வலுவான கோரிக்கையாக எழுந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியது.

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

“காட்டுப்பள்ளி பகுதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளது. அங்கு துறைமுக விரிவாக்கம் நடந்தால் ஒரு பக்கம் மண்சேர்ப்பும், மறுபக்கம் மண் அரிப்பும் அதிகரிக்கும். பழவேற்காடு ஏரியையும் கடலையும் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பழவேற்காடு ஏரி, பக்கங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு ஆகியவை பாதிக்கப்படும். சுற்றியிருக்கும் விவசாயிகளும், மீனவர்களும் பாதிக்கப்படுவர்” என்றும் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்குத் தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 ஏக்கர் மக்களுக்குச் சொந்தமான நிலமும், 1515 ஏக்கர் TIDCOக்கு சொந்தமான தனியார் நிலமும் கையகப்படுத்த உள்ளதாக தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சி,. சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் கைப்பற்ற உள்ளதால், கரைக்கடல் சேற்றுப் பகுதிகளில் சுமார் 6 கி.மீ நீளத்திற்கு2000 ஏக்கர் பரப்பளவிற்கு மணல் கொட்டப்படும் என்றும் இது கடுமையான சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கடல் உணவுகள் அதிகம் கிடைக்கும் இந்தப் பகுதியில் இந்தப் திட்டத்தால், மீன்வளம் வெகுவாகக் குறைந்திடும். இதனால், இப்பகுதியில் உள்ள பல மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும்,அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் இரண்டு பொதுத்துறை துறைமுகங்களும் மூடவேண்டிய அபாயம் ஏற்படும். இது அரசுக்கும், மக்களுக்கும் பேரிழப்பாக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமாகத் தாக்கப்பட்ட பத்திரிகையாளர் – பின்னணியில் அதானியா? போதைக் கும்பலா?

மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக இந்த திட்டத்தை அதானி குழுமம் முன்னெடுக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்