Aran Sei

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களை அரசு பழிவாங்கக் கூடாது – திருமாவளவன் வலியுறுத்தல்

Image Credits: The Week

சிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ – ஜியோ) கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நியாயமான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாகப் போராடி வருகிறது” என கூறியுள்ளார்.

பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் சிக்கல்கள் – புதிய கல்வி கொள்கை

“கடந்த 2019-ம் ஆண்டு இந்தக் கூட்டமைப்பு காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது. அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 5,068 பேர் மீது நடத்தை விதிகள் – 17 (பி) பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான குறிப்பாணைகளை அரசு பிறப்பித்திருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்தக் குறிப்பாணைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளில் பணி ஓய்வு பெற்ற 40க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய ஓய்வூதியப் பயன்களைப் பெற இயலவில்லை. பணிக்காலம் முடிந்துவிட்டது என்றாலும் அவர்கள் அதிகாரபூர்வமாக இன்னும் பணி ஓய்வைப் பெற முடியவில்லை. இதனால் அவர்களும் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களும் உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

“ஆகவே, தமிழக அரசு 5,068 பேர் மீதும் பதிவு செய்திருக்கிற குற்றக் குறிப்பாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அத்துடன், மிகவும் முதன்மையான கோரிக்கையானது ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை’த் தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதாகும். மத்திய அரசு இத்திட்டத்தை வரையறுத்திருக்கிறது என்றாலும், இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கின்றன. குறிப்பாக, மேற்கு வங்க மாநில அரசு, மத்திய அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோல, தமிழக அரசும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (சிபிஎஸ்) நடைமுறைப்படுத்த வேண்டாமென இந்தக் கூட்டமைப்பு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, தமிழக அரசு இதில் பிடிவாதம் காட்டாமல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இல்லை என்கிற நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது” என்றும் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்