மத்தியபிரதேசத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 33,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
மத்தியபிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜிது பட்வாரி எழுப்பிய கேள்விக்கு, அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி, 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான நான்கு ஆண்டுகளில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் 33,239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் 9,664 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், இந்த ஆண்டின் 11 மாதங்களில் 9,249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டில் இச்சட்டத்தின் கீழ் மொத்தம் 6,852 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7,474 ஆக இருந்திருக்கிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான கேள்வியுடன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தண்டனைகளின் விகிதம் குறித்த தகவலையும் ஜிது பட்வாரி கேட்டிருந்தார்.
மத்தியபிரதேசத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில், ஆண்டுக்கு சராசரியாக 27 விழுக்காடு வழக்குகள் முடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.