ஹரியானா மாநிலம் குர்கானில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திய இடத்தில் வலதுசாரி அமைப்புகள் கோவர்தன் பூஜை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா பங்கேற்றுள்ளார்.
ஹரியானாவின் குர்கானில் பல பொது இடங்களில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இஸ்லாமியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று தொழுகை நடத்தி வந்தனர். இதற்கு வலது சாரி அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
குர்கானில் கடந்த மாதம் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்ற இடத்தில் வலதுசாரி குழுவினர் திடீரென நுழைந்து முழக்கங்களை எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து வலதுசாரி அமைப்பினர் கைது செய்யப்பட்டு அன்றைய தினமே பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆர்யன் கான் வழக்கை விசாரித்த அதிகாரி பணியிட மாற்றம் – லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்தான் காரணமா?
மேலும் இஸ்லாமியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்தும் இடங்களுக்கு எதிரே உள்ள பகுதிகளில் வழிபாடு நடத்துவோம் என வலதுசாரிகள் கூட்டமைப்பான சன்யுக்த் இந்து சங்கர்ஷ் சமிதி அறிவித்தது. இந்த கூட்டமைப்பில் மொத்தம் 22 வலதுசாரி இயக்கங்கள் இணைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து குர்கான் நிர்வாகம் வியாழக்கிழமையன்று 8 பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததை திரும்பப் பெற்றது. உள்ளூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொது இடங்களில் தொழுகை நடத்த கொடுக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படுவதாகவும் குர்கான் நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் குர்கானில் வழக்கமாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வந்த இடத்தில் வலதுசாரி அமைப்பினர் கோவர்தன் பூஜை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ராவும் பங்கேற்றார். இது தொடர்பாக கபில் மிஸ்ரா கூறுகையில், ஒவ்வொரு வாரமும் தொழுகை என்ற பெயரில் சாலைகளை மறித்து கொள்ள யாருக்கும் உரிமை கிடையாது. அதனால்தான் பொதுமக்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுத்தனர். அது நியாயமான குரல். அவர்களது கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஐ.நா. சபையின் காலநிலை உச்சிமாநாடு தோல்வியடைந்து விட்டது – கிரெட்டா துன்பெர்க்
இதனிடையே வேறு பொது இடங்கள் அல்லது வக்பு வாரியத்துக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கே தொழுகை நடத்த இருப்பதாக இஸ்லாமியர்களின் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கின்றனர். தற்போது இந்துக்கள், இஸ்லாமியர் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கான இடங்களை இந்தக் குழு தேர்வு செய்யும் என குர்கான் நிர்வாகம் தெரிவித்துள்ளது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.