Aran Sei

கூகுள் ரகசியமாக ஃபேஸ்புக்கிற்கு உதவியது – அமெரிக்க மாகாண அரசுகள் குற்றச்சாட்டு

ணைய விளம்பரத்துறையின் முக்கியப்புள்ளிகளான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்கள், தங்கள் சந்தை அதிகாரத்தை ஒருங்கிணைக்க, தொடர் ஒப்பந்தங்கள் செய்திருப்பதாக கூகுளுக்கு எதிரான வழக்கில் டெக்சாஸ் உட்பட ஒன்பது மாகாணங்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளன.

இணைய விளம்பர விற்பனையில் பலமாக போட்டி போட்டுக் கொள்ளும் கூகுள் மற்றும் ஃபேஸ்புக், சர்வதேச அளவில், சந்தையின் பாதியை கைக்குள் வைத்திருக்கின்றன. கூகுளுடன் இணைக்கப்பட்ட  இணைய தளங்களில் (publishing partners), ஃபேஸ்புக்கின் விளம்பரதார வாடிக்கையாளர்களின் விளம்பரங்களை பொருத்த, 2018 ஆம் ஆண்டு இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மேல் நிலை அதிகாரத்தில் இருக்கும் நிர்வாகிகள் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியதாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக, கூகுளின் மென்பொருளை பயன்படுத்தி விளம்பரங்களை விற்கும் ஒரு ஸ்னீக்கர் ப்ளாக்கிற்கு (Sneaker blog – காலணி குறித்த வலைப்பதிவு), ஃபேஸ்புக்கில் விளம்பரங்கள் வாங்கியிருக்கும் ஒரு காலணி வர்த்தகரிடம் இருந்து வருவாய் கிடைக்கலாம்.

ப்ராஜெக்ட் ஜெடாய் (Project Jedi) என ரகசியமாக அழைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், சந்தை பங்குகளை காத்துக்கொள்ள, பிற விளம்பர நிறுவனங்களுடனும் கூகுள் இது போன்ற ஒப்பந்தங்களை செய்து கொண்டது என இது குறித்து ஒரு தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், ஃபேஸ்புக்கிற்கு இப்படி முன்னுரிமை அளித்ததை கூகுள் ஏற்றுக் கொள்ளவில்லை. கூகுளின் சந்தை அதிகாரத்தை சிதைக்க, பதிப்பாளர்கள் உருவாக்கிய மென்பொருளுக்கு ஆதரவளிக்க கூடாது என்பதற்கு ஃபேஸ்புக் சம்மதம் தெரிவித்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கூகுளிடம் மேலோட்டமாக அச்சுறுத்திவிட்டு, ஏலத்தை கட்டுப்படுத்த ஒரு ஒப்பந்தத்தை ஃபேஸ்புக் கொடுத்தது” என்றும் நிறுவனத்திற்குள் இருக்கும் சிலர் தெரிவித்ததாக குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக, ஃபேஸ்புக்கிற்கு பல சலுகைகள் கிடைத்துள்ளது. கூகுளின் தரவுகள் மற்றும் கொள்கை விதிவிலக்குகள் ஃபேஸ்புக்கிற்கு கிடைத்ததால், கூகுளின் பிற கூட்டு நிறுவனங்களைவிட ஃபேஸ்புக்கின் வாடிக்கையாளர்களுக்கு அதிக விளம்பரங்களை வெளியிடும் வசதி கிடைத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, கூகுளின் செய்தி தொடர்பாளர் பீட்டர் ஷாட்டன்ஃபெல்ஸ், ஃபேஸ்புக் மற்றும் கூகுளுக்கு இருக்கும் ஒப்பந்தம் குறித்த குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும், ஃபேஸ்புக்கிற்கு சிறப்பு தரவுகள் எதுவும் கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளார். இது குறித்து ஃபேஸ்புக்கிடம் கருத்து கேட்ட போது, பதில் எதுவும் வரவில்லை.

மேலும், கூகுளும், ஃபேஸ்புக்கும் விளம்பரங்களுக்கு விலை நிர்ணயித்திருப்பதாகவும், தொடர்ந்து இணைந்து இயங்குவதாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குற்றச்சாட்டின் இப்பகுதி திருத்தப்பட்டிருந்தது. எப்படி இரண்டு நிறுவனங்களும் “சந்தை பங்கீட்டு ஒப்பந்தத்தை” பயன்படுத்தினார்கள் என்பது விளக்கமாக இல்லை.

“இரண்டு நிறுவனங்களும் இணைந்து இயங்கிய அளவை வைத்துப் பார்த்தால், தங்கள் ஒப்பந்தம் நம்பிக்கைக்கெதிரான விதிமீறலாக ( antitrust violations) கருதப்படும், என்பதை, தெரிந்தே செய்தது போல இருக்கிறது. இரண்டு நிறுவனங்களும் எப்படி ஒருவருக்கொருவர் உதவுவார்கள் என கலந்தாலோசித்து, பேரம் பேசி, நினைவுகூர்ந்திருக்கின்றன” எனவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் மீது எந்த குற்றச்சாட்டையும் மாகாணங்கள் வைக்கவில்லை.

அமெரிக்க நீதித்துறை, நம்பிக்கைகெதிரான விதிமீறல் விசாரணையின் பங்காக, இரு நிறுவனங்களின் ரகசிய ஒப்பந்தத்தை விசாரித்துக் கொண்டிருப்பதாக, விசாரணை குறித்து தெரிந்த ஆறு பேர் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் கூகுள் மீது சட்டவிரோத நடவடிக்கையின் கீழ் வழக்கு பதிவு செய்த அமெரிக்க நீதித்துறை, 2018 ஆம் ஆண்டின் ஒப்பந்தம் குறித்து இன்னும் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவில்லை. அமெரிக்க நீதித்துறையின் செய்தி தொடர்பாளர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.

( www.thewire.in இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)  

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்