காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 6வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இன்று அல்-ஜாலா என்ற 11 மாடி கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அல்ஜசீரா தொலைக்காட்சி நிறுவனம், அசோசியேட் பிரஸ் போன்ற ஊடக நிறுவனங்களின் அலுவலகமும், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அந்தக் கட்டடத்தில் உள்ளன.
”இந்தக் கட்டடத்தில் ஒரு எளிவேட்டர் மட்டுமே உள்ளது. அதனை முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தீர்மானித்து மற்றவர் படிக்கட்டுகளில் இறங்கவது என முடிவு செய்தோம். படிகளில் இறங்கும் நபர்கள், அவர்களால் முடியும் பட்சத்தில் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டும் இறங்கினர். நானும் என் பங்கிற்கு குடியிருப்பில் இருந்த இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு இறங்கினேன்.” என பாலஸ்தீனத்தை சேர்ந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அல் ஜாலா கட்டடத்தைத் தகர்க்க இருக்கிறோம். அதில் வசிப்பவர்கள் வெளியேற ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்படும் என இஸ்ரேல் ராணுவத்தினர் தொலைபேசி வாயிலாக தெரிவித்தனர்.
”கூடுதலாக 10 நிமிடங்கள் அளிக்க வேண்டும். உள்ளிருக்கும் உபகரணங்களை எடுக்க 4 பேரையாவது அனுமதிக்க வேண்டும்” என்று கட்டட உரிமையாளர் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகளிடம் மன்றாடியபோது, அதற்குச் செவிசாய்க்காமல் தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதல் காரணமாக இஸ்ரேல் ராணுவத்தினர், “தாக்குதலுக்கு உள்ளான கட்டடத்தை ஹமாஸ் படையினர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் செயல்களுக்கு ஊடகவியலாளர்களைக் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர்.” என தெரிவித்துள்ளனர். ஆனால் இதை நிருபிக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரத்தையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்தக் குற்றச்சாட்டை அந்தக் கட்டடத்தில் வசிக்கும் மக்கள் மறுத்து வருகின்றனர்.
“எங்கள் அலுவலகம் 15 வருடமாக அந்தக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதுவரை ஹமாஸ் பிரிவினர் ஒரு சிறிய நடமாட்டத்தை கூட நாங்கள் அந்தப் பகுதியில் பார்த்ததில்லை” என அசோசியேட்டட் பிரஸ் ஊடகத்தின் தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான கேரி பூடிட் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.