Aran Sei

பசுமை தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் – சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினராக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். 

நீதிமன்றங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை தவிர்க்கவும், சுற்றுசூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகள் கிடைக்கவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு டெல்லியில் உள்ளது. கிளை அமர்வுகள் சென்னை உட்பட நான்கு நகரங்களில் உள்ளன. 

இந்நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் உறுப்பினர்களாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான கிரிஜா வைத்திநாதன், சத்யகோபால் மற்றும் ஐ.எஃப்.எஸ் அதிகாரி அருண்குமார் வர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

பசுமை தீர்ப்பாயத்திற்கு, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை நியமித்துள்ளது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமனிடம் அரண்செய் பேசிய போது “ இது தவறான முடிவு தான். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியையும், ஐ.எஃப்.எஸ் அதிகாரியையும் அந்த பொறுப்பிற்கு நியமிக்கவே கூடாது. அவர்கள் அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவர்களுடைய அனுதாபம் அதிகார வர்க்கத்தோடு தான் இருக்கும். பசுமை தீர்ப்பாயத்திற்கு செல்லும் வழக்குகள் எல்லாம் அதிகார வர்க்கத்திற்கு எதிரானவை. இதிலேயே கருத்து வேற்றுமை வரும்” என்றார். 

“இரண்டாவது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதித்துறை சார்ந்த பொறுப்புகளில் உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு சட்டம் தெரிந்திருக்க வேண்டும். தொழில்நுட்ப பொறுப்புகளில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு துறை சார்ந்த நிபுணத்துவம் இருக்க வேண்டும். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருவருக்கும் நிர்வாகம் சார்ந்த திறன் இருக்கலாம், ஆனால் துறை சார்ந்த திறன் இல்லை” என கூறிய நித்யானந்த ஜெயராமன், ஆகவே துறைசார்ந்த அனுபவம் இல்லாத கிரிஜா வைத்தியநாதனை பசுமை தீர்ப்பாயத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது தவறான முடிவு என்று தெரிவித்தார். 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்