பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீரின் வட எல்லையில் உள்ள ‘கில்கிட்-பால்டிஸ்தான்’ எனும் சர்ச்சைக்குரிய பகுதிக்கு மாகாண அந்தஸ்தை வழங்கியுள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் இம்முடிவால் இந்தியா கோபம் அடைந்துள்ளது.
கில்கிட் பால்டிஸ்தான் எங்கள் பகுதி – பாகிஸ்தானை எச்சரிக்கும் இந்தியா
1947-ம் ஆண்டு, இந்தியா-பாகிஸ்தான் பிறந்த சிறிது காலத்திலிருந்தே, இப்போது கில்கிட்-பால்டிஸ்தான் என்று அழைக்கப்படும் பகுதியைப் பாகிஸ்தான் நிர்வகித்து வருகிறது. ஆனால், இந்தியாவோ சீனா மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள இந்த மலைப்பிரதேசத்தை காஷ்மீரின் ஒருங்கிணைந்த பகுதி என்று வலியுறுத்தி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை, கில்கிட் நகரில் உரையாற்றிய இம்ரான் கான், “நீண்ட கால கோரிக்கை ஒன்று நிறைவேற உள்ளது. கில்கிட்-பால்டிஸ்தானுக்கு தற்காலிக மாகாண அந்தஸ்தை வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
Live Stream: Prime Minister @ImranKhanPTI Addressing Azadi Parade at Gilgit-Baltistan (01.11.2020)#PrimeMinisterImranKhan https://t.co/tGwUk3zhI8
— Prime Minister's Office, Pakistan (@PakPMO) November 1, 2020
கடந்த ஆண்டு, இந்தியா, ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் சட்டப் பிரிவு 370-ன் கீழான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டித்தது. இது, காஷ்மீர் பகுதியில் பல பத்தாண்டுகளாக இருந்த நிலையை முற்றிலும் மாற்றியது. இதற்குப் பின்னர் பாகிஸ்தான் கில்கிட்-பால்டிஸ்தான் தொடர்பாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கில்கிட் பால்டிஸ்தானில் நவம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களுக்கு முன்னதாக இதனை அறிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், இந்த நடவடிக்கை எப்போது நிறைவேற்றப்படும் என்ற காலக்கெடுவை நிர்ணையிக்கவில்லை.
சீனாவின் பங்கு
சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத்தின் (சிபிஇசி) முக்கிய அங்கமான கரகோரம் நெடுஞ்சாலையை அமைத்தது உட்பட 13 லட்சம் மக்கள் வசிக்கும் கில்கிட்-பால்டிஸ்தானில் உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்க சீனா பல ஆண்டுகளாக பணிகளை அமல்படுத்தி வருகிறது.
“நன்கு பராமரிக்கப்படும், நவீன சாலை கில்கிட்-பால்டிஸ்தானுக்கு முக்கியமான முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது,” என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். “இப்பகுதியை ஒரு மாகாணமாக்கும் நடவடிக்கை பின்தங்கிய பகுதிகளையும் சமூகத்தின் ஏழை பிரிவினரையும் உயர்த்துவதற்கு உதவும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
கில்கிட் பால்டிஸ்தானின் அந்தஸ்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பாகிஸ்தானின் அரசியலமைப்பை திருத்த வேண்டும். அவ்வாறு திருத்தி இறுதி செய்யப்பட்டால், கில்கிட்-பால்டிஸ்தான் பாகிஸ்தானின் ஐந்தாவது மாகாணமாக மாறும்.
‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு’
கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் முக்கிய அரசியல் மாற்றங்களை கொண்டு வரும் பாகிஸ்தான் பிரதமரின் அறிவிப்பை இந்தியா கண்டித்துள்ளது.
Please see our statement on Pakistan Government’s decision to accord “provisional provincial status” to the so-called “Gilgit-Baltistan” : pic.twitter.com/8XzPT0aSFH
— Anurag Srivastava (@MEAIndia) November 1, 2020
“பாகிஸ்தானின் சட்டவிரோத மற்றும் பலவந்த ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா உறுதியாக நிராகரிக்கிறது,” என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
“சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரம் இல்லை” என்றும், “இந்தப் புதிய நடவடிக்கை, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்தப் பகுதிகளில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை மறைத்து விடாது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும், சுதந்திரத்திற்குப் பின்னர் காஷ்மீரை போட்டி போட்டு சொந்தம் கொண்டாடுகின்றன. நீர் நிலை மோசமடைந்துள்ள இரு நாடுகளும், சுருங்கிவரும் இமயமலை பனிப்பாறைகளை முக்கிய உயிர்நாடியாகக் கருதுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம், கடந்த ஆண்டு, ஜம்மு&காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் பிரிவுகளை நீர்க்கச் செய்தது. அதன் மூலம், ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சி அந்தஸ்தையும், சொந்தக் கொடியையும் பிற உரிமைகளையும் ரத்து செய்தது.
இந்த நடவடிக்கை, பாகிஸ்தான் அரசை கோபமடைய வைத்தது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.