ஜம்மு காஷ்மீரின் வட எல்லையில் உள்ள ‘கில்கிட்-பால்டிஸ்தான்’ எனும் சர்ச்சைக்குரிய பகுதிக்கு மாகாண அந்தஸ்தை வழங்குவதற்கான பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா கண்டித்துள்ளது. இப்பிராந்தியத்தில் இஸ்லாமாபாத்தின் ‘சட்டவிரோத’ ஆக்கிரமிப்பை மறைப்பதே இதன் நோக்கம் என்றும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
“இஸ்லாமாபாத்தின் சட்டவிரோத மற்றும் பலவந்த ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள இந்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு முக்கிய மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பாகிஸ்தானின் முயற்சியை இந்தியா உறுதியாக நிராகரிக்கிறது,” என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்வியைத் தொடர்ந்து அனுராக் ஸ்ரீவாஸ்தவா இந்தப் பதிலை அளித்துள்ளார். “ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள், ‘கில்கிட்-பால்டிஸ்தான்’ என்று அழைக்கப்படும் பகுதி உட்பட அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். 1947-ம் ஆண்டில் ஏற்பட்ட ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்திய ஒன்றியத்தின் முறையான, முழுமையான மற்றும் மாற்றமுடியாத இணைப்பின் காரணமாக இது நிதர்சனம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Such attempts, intended to camouflage Pak's illegal occupation, can't hide grave human rights violations & denial of freedom for over 7 decades to people residing in these Pak occupied territories:MEA Spox on Pak PM announcing 'provisional provincial status' to 'Gilgit-Baltistan' https://t.co/fHU2ZOCaEv
— ANI (@ANI) November 1, 2020
“சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் அரசுக்கு அதிகாரம் இல்லை” என்றும், “இந்தப் புதிய நடவடிக்கை, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்தப் பகுதிகளில் ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை மறைக்காது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
`அனைத்துப் பகுதிகளையும் விட்டு வெளியேறுங்கள்‘
“இந்தியப் பிரதேசங்களின் நிலையை மாற்ற முற்படுவதற்குப் பதிலாக பாகிஸ்தானை அதன் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள அனைத்துப் பகுதிகளையும் விட்டு உடனடியாக வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாத இறுதியில், கில்கிட்-பால்டிஸ்தானின் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்த வருடத் தொடக்கத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில், 2018-ம் ஆண்டின் நிர்வாக உத்தரவைத் திருத்தி இப்பிராந்தியத்தில் பொதுத் தேர்தலை நடத்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இஸ்லாமாபாத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
நிர்வாக மாற்றங்களுக்காக 2018-ம் ஆண்டு வழங்கப்பட்ட கில்கிட்-பால்டிஸ்தான் ஆணை பாகிஸ்தான் பிரதமருக்குப் பலவற்றில் சட்டமியற்ற அனுமதி வழங்கியுள்ளது.
தீர்ப்பைத் தொடர்ந்து இங்குள்ள மூத்த பாகிஸ்தான் தூதரிடம் கண்டனத்தைப் பதிவு செய்த இந்தியா இத்தீர்ப்பை எதிர்த்துப் போராட்டத்தையும் நடத்தியது.
வாக்கெடுப்பு 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா பேரிடர் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.