Aran Sei

‘பிரதமர் மோடி தன் சுயத்தை மறைப்பவரல்ல’ – மோடியைப் புகழ்ந்த காங்கிரஸ் தலைவர்

பிரதமர் நரேந்திர மோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை என்றும் அவருடைய இந்தப் பண்பை நான் பாராட்டுகிறேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

நேற்று (பிப்ரவரி 28), ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அப்போது, “நான் பல தலைவர்களில் பண்புகளை விரும்புகிறவன். நான் கிராமத்தைச் சேர்ந்தவன். அதற்கு பெருமைப்படுகிறேன். நம்முடைய பிரதமர் கூட ஒரு கிராமத்திலிருந்து வந்து தேநீர் விற்றவர்தான். நாங்கள் அரசியல்ரீதியாக போட்டியாளர்கள் என்றாலும், அவர் தனது சுயத்தை மறைக்கவில்லை என்பதை நான் பாராட்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் என்கவுன்டர் – நீதி வேண்டும் : போலீஸ் விளக்கத்தை மறுக்கும் இளம் காஷ்மீரிகளின் குடும்பத்தினர்

“ஆனால், சில அரசியல்வாதிகள் மாயையில் வாழ்கின்றனர். ஒரு மனிதர் எப்போதும் அவரது சுயத்தை சிலாகிக்க வேண்டும். நான் பல நாடுகளுக்குப் பயனப்பட்டிருக்கிறேன். 5 நட்சத்திர, 7 நட்சத்திர விடுதிகளில் தங்கியிருக்கிறேன். ஆனால், என் சொந்த கிராமத்தில் என் மக்களுடன் நான் இருக்கும்போது தனித்துவமாக உணர்கிறேன்.” என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி 9-ம் தேதி, குலாம் நபி ஆசாத் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் ஓய்வு பெற நான் அனுமதிக்க மாட்டேன். நான் எப்போதும் உங்களிடமிருந்து அறிவுரைகளைப் பெறுவேன். எனது கதவுகள் எப்போதும் உங்களுக்காகத் திறந்திருக்கும்.” என்று தெரிவித்திருந்தார்.

“இந்தியாவின் இஸ்லாமியராக இருப்பதில் பெருமைகொள்கிறேன்” – நாடாளுமன்றத்தில் குலாம் நபி ஆசாத் உருக்கம்

அதைத்தொடர்ந்து, குலாம் நபி ஆசாத் அளித்த கடைசி உரையில், நான் இந்துஸ்தானின் முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரம், காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

கடந்த ஆண்டு, குலாம் நபி ஆசாத் உட்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 23 தலைவர்கள், கட்சியின் தலைமை நிர்வாகத்தில் பெரிய அளவிலான சீர்த்திருத்தங்கள் வேண்டும் என்றும், நிரந்தர தலைமை வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் இடைகாலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

மூத்த தலைவர்களான ஆனந்த் ஷர்மாவும், கபில் சிபிலும், ஆசாத் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களை ஏன் காங்கிரஸ் கட்சி உபயோகப்படுத்திக்கொள்ள மறுக்கிறது என்று கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்