Aran Sei

விவசாய சட்டம் குறித்து உச்ச நீதிமன்ற குழு அறிக்கை – பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட முடிவு

விவசாய சட்டங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றத்தில் உருவாக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட உள்ளதாக அக்குழுவில் இடம்பெற்றுள்ள அனில் கான்வாத் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டங்கள், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருப்பதால், இந்த மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அம்மனுக்களோடு போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி தாக்கல் செய்த பல்வேறு மனுக்களையும், உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி 12 ஆம் தேதி விசாரித்தது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்ற ஒன்றிய அரசு – பிரதமர் மோடி அறிவிப்பு

விசாரணைக்குப் பின், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “இந்தப் போராட்டங்களால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவது பற்றியும் நாங்கள் கவலை கொள்கிறோம். எங்களிடம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விவசாய பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கிறோம். அந்த வகையில், எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் ஒன்று, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிப்பது. மேலும், ஒரு குழுவை உருவாக்குவது. இதை நாங்கள் இப்போது செய்கிறோம்” என்று கூறினார்.

மேலும், “இந்தக் குழு நமக்காக உருவாக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் (போராடும் விவசாயிகள்) இந்தக் குழுவின் முன் வந்து உரையாடலாம். இது உத்தரவுகளையோ தண்டனைகளையோ உங்களுக்கு வழங்காது. மாறாக, அது எங்களுக்கு (உச்ச நீதிமன்றத்திற்கு) இந்த விவசாய சட்ட பிரச்சனையைப் பற்றி ஒரு அறிக்கையை மட்டுமே சமர்ப்பிக்கும்” என்று அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உறுதியளித்திருந்தார்.

இக்குழுவில், விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாத்தி, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் புபிந்தர் சிங் மான், தெற்காசிய சர்வதேச உணவு கொள்கை அமைப்பின் இயக்குனர் பிரமோத் குமார் ஜோஷி, ஷேத்கரி ஷன்கத்தன் அமைப்பைச் சேர்ந்த அனில் கான்வாத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

‘உச்ச நீதிமன்ற குழுவில் மோடி ஆதரவாளர்கள்; எவ்வாறு விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்?’ – காங்கிரஸ் கேள்வி

அதைத்தொடர்ந்து, இக்குழுவானது தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்நிலையில், இன்று(நவம்பர் 19), காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றியுள்ளார். அப்போது, “மூன்று விவசாய சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும்” என்று அறிவித்தார்.

இதுகுறித்து, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவிலுள்ள அனில் கான்வாத், “மூன்று விவசாய சட்டங்களும் ரத்து செய்யப்பட்டால், தாக்கல் செய்யப்பட்ட குழுவின் அறிக்கைக்கு மதிப்பில்லாமல் போய்விடும். உச்ச நீதிமன்றம் குழுவின் அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடவில்லை என்றால், நான் வெளியிடுகிறேன். இந்த அறிக்கை குப்பை தொட்டிக்கு போக கூடாது” என்று கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிலிருந்து புபிந்தர் சிங் விலகல் – போராடும் விவசாயிகளோடு நிற்பதாக கருத்து

“வரும் திங்கள்கிழமை (நவம்பர் 22), இக்குழு கூடி, அறிக்கையை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கும். குழுவில் உள்ள மற்றவர்கள் கல்வியாளர்களாகவும் நிர்வாகிகளாகவும் உள்ளனர். அவர்களால் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒன்றும் உதவ முடியாது. ஆனால், நான் விவசாயிகள் தலைவர். நான் விவசாயிகள்மீது கவலை கொள்ள வேண்டியுள்ளது. குழுவின் பரிந்துரைகளை விவசாயிகளும், ஊடகங்களும், பொதுமக்களும் அறிந்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்