Aran Sei

வெறுப்பு படுகொலைகள் – 80 ஆண்டுகளுக்குப் பிறகும் நீதியை எதிர்கொள்ளும் ஹிட்லர் ஜெர்மனியின் ஊழியர்கள்

Image Credit : AP

நாஜி ஜெர்மனியில் 3,518 பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக 100 வயதான நபர் ஒருவர் மீது ஜெர்மன் அரசு வழக்கறிஞர்களால் குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்கு அருகில் இருந்த சாக்சன்ஹவுசன் வதை முகாமில் அவர் பாதுகாவலராக பணிபுரிந்திருந்தார் என்ற அசோசியேட்டட் பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

1933-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த அடால்ஃப் ஹிட்லர் தலைமையிலான நாஜிக் கட்சி ஜெர்மனியில் சர்வாதிகார ஆட்சியை நடத்தியது. யூத மதத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரம் நடத்தி, லட்சக் கணக்கான யூதர்களின் குடியுரிமையை பறித்து, அவர்களை வதை முகாம்களில் அடைத்தது. கம்யூனிஸ்டுகளையும், பிற அரசியல் எதிரிகளையும் வேட்டையாடியது.

இந்த வதை முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் சுடப்பட்டும், நச்சு வாயு செலுத்தப்பட்டும் கொல்லப்பட்டனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் பட்டினி, மோசமான உழைப்பு நிலைமைகள், நோய்கள் காரணமாக உயிரிழந்தனர்.

’சிறுபான்மையினர் மீது வன்மம்; பாஜக கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையடைக்க வேண்டும்’ -வைகோ

இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட பிறகு, இந்த இனப் படுகொலை குற்றங்களுக்கு நேரடி பொறுப்பானவர்கள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட்டது. நாஜிக்களின் மத வெறுப்பு, இன வெறுப்பு, அரசியல் வெறுப்பு குற்றச் செயல்களுக்கு உதவி செய்து, அரசு ஊழியர்களாக பணி புரிந்தவர்கள் நேரடியான குற்றம் புரிந்திருந்தால் தண்டிக்கப்பட்டனர்.

பாதுகாவலர்களும் பிற கீழ்மட்ட பதவிகளில் இருந்தவர்களும் படுகொலைகளுடன் நேரடியாக தொடர்பு இல்லாதவர்களாகக் கருதப்பட்டனர் என்கிறது நியூயார்க் டைம்ஸ்.

எனவே, சமீப ஆண்டுகள் வரையில், வதை முகாம்களிலும், பிற நாஜி நிறுவனங்களிலும் உதவியாளர்களாகவும் பாதுகாவலர்களாகவும் பணிபுரிந்தவர்கள், குறிப்பான கொலைகளில் பங்கேற்றதற்கான ஆதாரங்களை கொடுத்தால்தான் அவர்கள் மீது குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வதாக ஜெர்மனியின் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி வந்தன.

வதை முகாம்களிலும் சிறைகளிலும் இருந்த கைதிகளுக்கு பாதுகாவலர்களின் அடையாளம் தெரியாமல் இருந்ததும், சாட்சியங்கள் இல்லாமல் இருப்பதும், பல ஆண்டுகள் ஓடி விட்டதும் காரணமாக இத்தகைய ஆதாரங்களை கொடுப்பது சாத்தியமற்று இருந்தது.

ஆனால் “இப்போதைய நிலைப்பாடு என்னவென்றால், பெருந்திரள் படுகொலைகளும், நச்சுவாயு கூடங்களில் கொலைகளும் மட்டுமின்றி, கொடூரம், பட்டினி, புறக்கணிப்பு, குளிரில் உறைந்து போதல் ஆகியவற்றால் கைதிகள் இறந்து கொண்டிருக்கின்றனர் என்பதை ஏற்றுக் கொண்டவர்கள் மீதும் வழக்கு தொடரப்படுகிறது” என்று நாஜி கால குற்றங்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜெர்மனி அரசுத் துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள அரசு வழக்கறிஞர் தாமஸ் வில் கூறியுள்ளார்.

2011-ம் ஆண்டில் முன்னாள் ஓஹையோ வாகன உற்பத்தித் துறை தொழிலாளர் ஜான் டெம்ஜான்ஜுக் என்பவர், ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த போலந்தின் சோபிபோர் கொலை முகாமில் பாதுகாவலராக பணி புரிந்தார் என்ற அடிப்படையில் அங்கு நடந்த கொலைகளுக்கு துணையாக இருந்ததாக தீர்ப்பு சொல்லப்பட்டது. குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்த ஜான் டெம்ஜான்ஜுக் அவரது மேல்முறையீடு விசாரிக்கப்படுவதற்கு முன்பு இறந்து போனார்.

இதே அடிப்படையில், 2015-ம் ஆண்டில் முன்னாள் அவுஷ்விட்ச் பாதுகாவலர் ஆஸ்கர் கிரோனிங் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டார். அவுஷ்விட்ச் கொலை முகாமில் அலுவலக ஊழியராக இருந்த ஆஸ்கர் கிரோனிங் மீது, 1944-ம் ஆண்டு அந்த முகாமுக்கு அனுப்பப்பட்ட 3 லட்சம் ஹங்கேரிய யூதர்கள் கொல்லப்பட்டதற்கு உடந்தையாக இருந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

94 வயதான கிரோனிங்-க்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மேல் முறையீட்டு காலத்தில் அவர் 2018-ல் இறந்து போனார். அவர் மீதான குற்றத்தை ஜெர்மனியின் ஒன்றிய நீதிமன்றம் உறுதி செய்தது.

சென்ற ஆண்டு ஹாம்புர்க் மாநில நீதிமன்றம், 93 வயதான புரூனோ டே என்பவர் 5,230 கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாக தீர்ப்பு அளித்தது. 1944 ஆகஸ்ட் முதல் 1945 ஏப்ரல் வரை ஸ்டுட்ஹாஃப் முகாமில் அவர் பாதுகாவலராக பணி புரிந்த போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இது. அவருக்கு 2 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

சென்ற வாரம் அலுவலக செயலாளராக வேலை செய்த ஒரு பெண் (இப்போது வயது 94) மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதின்ம வயதில் ஸ்டுட்ஹோஃப் வதை முகாமில் அவர் செயலராக பணி புரிந்த போது கொல்லப்பட்ட 10,000 கொலைகளுக்கு துணையாக இருந்ததாகவும், கொலை முயற்சிகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும், நாஜி கொலை எந்திரத்தை பராமரிப்பதற்கு உதவியாக இருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிறுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

இந்த வாரம் 100 வயதான சாக்சன்ஹவுசன் முகாமின் பாதுகாவலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிக வயதை எட்டி விட்டாலும், தீவிர வலதுசாரி அரசியல் வளர்ந்து வரும் நிலையில் 20-ம் நூற்றாண்டின் மிக மோசமான குற்றங்கள் நடப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் மீது வழக்கு தொடர்ப்பது அவசியமானது என்று ஜெர்மானியர்களின் ஒரு பிரிவினர் கருதுவதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. “கொலை, கொலைக்கு துணை போவது ஆகியவற்றுக்கு வழக்கு தொடர்வதற்கு கால வரம்பு இல்லை” என்று 100 வயதானவர் மீது வழக்கு தொடர்ந்துள்ள நியூருப்பின் வழக்கறிஞர் சிரில் கிளெமன்ட் கூறியுள்ளார்.

இப்போது ஜெர்மனியின் வடமேற்கு நகரமான ஒரானியன்பர்கில் உள்ள நியூருப்பினில் உள்ள மாநில நீதிமன்றம் 100 வயதான சாக்சன்ஹவுசன் முகாமின் பாதுகாவலர் மீதான வழக்கை பரிசீலித்து, குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கை எதிர் கொள்வதற்கான உடல்நிலையை கருத்தில் கொண்டு விசாரணைக்கான தேதியை தீர்மானிக்க வேண்டும்.

இந்தக் குற்றங்களில் “1942-ல் சோவியத் போர்க்கைதிகளை சுட்டுக் கொன்றதும் அடங்கும்” என்று நியூருப்பின் நீதிமன்றம் கூறியுள்ளது. “மேலும், ஜைக்லோன் பி என்ற நச்சு வாயுவை பயன்படுத்தி கைதிகளை கொலை செய்வதற்கு துணையாக இருந்ததும், சுட்டுக் கொல்வதற்கும், வதை முகாமில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிலைமைகளை பராமரிப்பதற்கும் உதவியாக இருந்த குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன” என்று அது கூறியுள்ளது.

சாக்சன்ஹவுசன் முகாம் 1936-ம் ஆண்டு பெர்லினின் வடக்கு எல்லையில் உருவாக்கப்பட்டது. நாஜி வதை முகாம் அமைப்பின் முழுக் கட்டுப்பாட்டையும் ஜெர்மன் அரசின் எஸ்எஸ் படைப் பிரிவிடம் ஹிட்லர் ஒப்படைத்த பிறகு முதல் புதிய முகாமாக இது இருந்தது.

ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும், பிற ஆக்கிரமித்த நாடுகளிலும் நாஜிக்கள் அமைத்த வதை முகாம்களுக்கான தலைமை முகாமாகவும், அங்க அனுப்பப்படும் காவலர்களை பயிற்றுவிப்பதற்கான மையமாகவும் சாக்சன்ஹவுசன் இருந்தது.

நாஜி ஜெர்மனி – 1940-களில்

ஆரம்ப ஆண்டுகளில் அரசியல் கைதிகளும் மதச் சிறுபான்மையினரும், மாற்றுப் பாலினத்தவரும் அங்கு கொண்டு வரப்பட்டனர். 1938-ல் யூத எதிர்ப்பு வன்முறை இரவான கிரிஸ்டல்நாக்ட் (உடைந்த கண்ணாடி இரவு)-க்குப் பிறகு யூதர்களின் முதல் பெரும் குழு கொண்டு வரப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் போர்க்கைதிகளும் இங்கு அடைத்து வைக்கப்பட்டனர். அவர்கள் ஆயிரக்கணக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1942-ல் பெரும்பாலான யூத கைதிகள் அவுஷ்விட்ஸ் மரண முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

1936-க்கும் 1945-க்கும் இடையே அங்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். பல ஆயிரகணக்கானவர்கள் பட்டினி, நோய்கள், கட்டாய உழைப்பு போன்ற காரணங்களால் மட்டுமின்றி, திட்டமிட்ட மருத்துவ சோதனைகள், சுட்டுக் கொல்லுதல், தூக்கில் போடுதல், நச்சு வாயு செலுத்துதல் அமைப்புரீதியான எஸ்எஸ் அழிப்பு நடவடிக்கைகளாலும் கொல்லப்பட்டனர்.

இந்த முகாமில் 1 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

சாக்சன்ஹவுசன் 1945 ஏப்ரல் மாதம் சோவியத் செம்படையினால் விடுவிக்கப்பட்டது.

“எங்களுடைய பணியின் மூலமாக, ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நாங்கள் உறுதி செய்கிறோம்” என்று நாஜி குற்றங்களை விசாரிக்கும் வழக்கறிஞர் தாமஸ் வில் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்