Aran Sei

‘தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயார்; ஆனால், தடுப்பூசி எங்கே?’ – ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

ன்று (மே 1) தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட 18 வயதிலிருந்து 44 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயார், தடுப்பூசி எங்கே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மே 1 ஆம் தேதி முதல், 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு  தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாடால் வெறும் ஐந்து மாநிலங்கள் மட்டுமே தடுப்பூசி வழங்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, காஷ்மீர், கர்நாடகா போன்ற மாநிலங்கள், தங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் இன்னும் வந்து சேராததால், மே 1 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்ட தடுப்பூசி முகாமை எங்களால் நடத்தவியலாது என்று தெரிவித்திருந்தன.

‘மத்திய அரசின் நடவடிக்கையால் நாளை தடுப்பூசி முகாம் தொடங்குவது சந்தேகமே’ – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

குறிப்பாக, “18 வயதிலிருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமிற்கு, தமிழ்நாடு ஒன்றரைக் கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஆர்டர் கொடுத்திருக்கிறது. ஆனால், பூனேவில் உள்ள மருந்து நிறுவனத்திடமிருந்து எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும். ஹைதராபாத் மருந்து நிறுவனத்திடமிருந்து எவ்வளவு கிடைக்கும். மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்ட எண்ணிக்கையிலிருந்து எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும். எப்போது கிடைக்கும் போன்றவற்றை மத்திய அரசு இன்னும் தெரிவிக்கவில்லை.” என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக, இன்று (மே 1), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜி.ராமகிருஷ்ணன், “மே முதல் தேதியில் இருந்து 18-44 வயதினருக்கு தடுப்பூசி தயார் என்றார் பிரதமர் மோடி. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயார். தடுப்பூசி எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில், நேற்று (ஏப்ரல் 30) மட்டும் 4,01,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் வழியாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,91,64,969  ஆக உயர்ந்துள்ளது.

‘ஆர்டர் செய்த தடுப்பூசிகள் கிடைக்கவில்லை; தடுப்பூசி முகாம்களை மூடுகிறோம்’ – காஷ்மீர், மகாராஷ்ரா அரசுகள் அறிவிப்பு

இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,11,853 பேர்  மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,523  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்