ரஃபேல் போர் விமானங்கள் வாங்க போட்டப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் நீதிபதி தலைமையில் அந்நாட்டில் விசாரணை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் இது தொடர்பான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழத் தொடங்கி இருப்பதால் மோடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான பிரஞ்ச் செய்தி ஊடகமான மீடியாபார்ட் இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், “2016 ஆம் ஆண்டு, 36 ரஃபேல் விமானங்களை விற்பது தொடர்பாக இந்தியா பிரான்ஸ் அரசு இடையே 780 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதில் ஊழல் மற்றும் பாரபட்சம் நடந்திருப்பதாக கூறி விசாரணை மேற்கொள்ள நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இரு நாடு அரசுகளிடையே போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக ’மிகவும் முக்கியமான விசாரணை’ ஜூன் 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டு பொது வழக்கு தொடுப்பு சேவைகளின் நிதி குற்றங்கள் தொடர்பான பிரிவான பி.என்.எஃப் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஃபேல் ஒப்பந்த ஊழில் ஒரு இடைத்தரகருக்கும் பங்குண்டு என்றும், இது இந்திய அமலாக்கத்துறைக்கு தெரியும் என்றும் தொடர்ச்சியான புலனாய்வு அறிக்கைகளை ‘மீடியாபார்ட்’ வெளியிட்டத்தை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.
”மீடியாபார்ட்டின் புலனாய்வு அறிக்கைகள் வெளியானதை அடுத்து பிரான்ஸ் நாட்டின் ஊழல் எதிர்ப்பு தன்னார்வல அமைப்பான ஷெர்பா சார்பில் பிரான்ஸ் தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ’ஊழல்’, ’செல்வாக்கை தவறாக பயன்படுத்தல்’, ‘பண மோசடி’, ‘பாரபட்சமாக செயல்படுதல்’, ‘பாரபட்சமாக செய்படுதல்’ மற்றும் ஒப்பந்தம் தொடர்பாக வழங்கப்பட்ட தேவையற்ற வரி தள்ளுபடிகள் குறித்து அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.” என மீடியாபார்ட் தெரிவித்துள்ளது.
புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள நான்கு குற்றங்கள்குறித்து விசாரணையில் கவனம் செலுத்தப்படும் என பி.என்.எஃப் உறுதியளித்திருப்பதாக, மீடியாபார்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.