கட்டாய மதமாற்றம் செய்யப் பெண்களைக் கூட்டி செல்கிறார்கள் என ஏபிவிபி மிரட்டியதால் பாதிவழியில் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள் அந்த விவகாரம் தொடர்பாகக் காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 19 அன்று ஈஸ்டர் விடுமுறையின் காரணமாக டெல்லியிலிருந்து ரூர்கேலாவுக்கு மதஉடையிலிருந்த இரண்டு கன்னியாஸ்திரிகளும் அவர்களுடன் சாதாரண உடையிலிருந்த இரண்டு தேவாலய பெண் ஊழியர்களும் ரயில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
ஜான்சி ரயில்நிலையம் அருகில் ரயில் வந்துகொண்டிருந்தபோது, ரயிலில் ஏறிய ஏபிவிபி உறுப்பினர்கள் அந்த இரண்டு பெண்களையும் கன்னியாஸ்திரிகள் கட்டாயமதமாற்றத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரச்சனையில் ஈடுபட்டார்கள்.
ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள் காவல்துறையால் சோதிக்கப்பட்டு பின் அடுத்த நாள் வேறொரு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும், கன்னியாஸ்திரி உடையிலேயே சென்றால் மேலும் பிரச்சனை ஏற்படும் என்பதால் சாதாரண உடையை மாற்றச் சொல்லிக் காவல் துறை கேட்டுக்கொண்டதால் அவ்வாறு உடை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகக் கன்னியாஸ்திரிகள் லக்னோ ரயில்வே காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரயிலில் ஏறியவுடன் மதமாற்றம் செய்யக் கூட்டி செல்கிறீர்களா ? எனத் கன்னியாஸ்திரிகளிடம் தகராறில் ஈடுபட்டார்கள். கன்னியாஸ்திரிகள் பதிலளிக்காதபோது ஏபிவிபி அமைப்பைச் சார்ந்த மற்றவர்களை அழைத்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகக் காவல் கண்காணிப்பாளர் சவுமித்ரா யாதவ் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஏபிவிபி அமைப்பினர், தங்கள் அமைப்பு சரியானதை தான் செய்துள்ளதாகவும் , மிஷனரிகளால் பெண்கள்மீதான பாலியல் சுரண்டல் அதிகரிப்பதாகவும், மதமாற்றம் அதிகரிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமித் ஷா , “இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.