Aran Sei

‘உபா சட்டத்தை அரசு தவறாக பயன்படுத்துவதால் பலர் சிறைகளிலேயே வாழ்வை இழக்கின்றனர்’ – உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள்

credits : the new indian express

நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா) தவறாக பயன்படுத்தபடுவதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

‘உபா சட்டத்தின் தீய விளைவுகள்’ என தகவல் உரிமைகள் சட்ட ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் நடத்திய காணொளி வாயிலான கூட்டத்தில் பேசும்போது அவர்கள்  இதனை தெரிவித்துள்ளனர்.

தேச துரோக குற்றச்சாட்டின் கீழ்உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் வாடும் சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களின் குடும்பங்களுக்கு ஏற்படும் மன அதிர்ச்சி குறித்து நீதிமன்றம், சமூகம் மற்றும் மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மதன் லோகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசிற்கு எதிரான அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக தங்களின் அன்புக்குரியவர்களை துரோகிகள் என முத்திரை குத்திய சமூகத்தை எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள் என்றால், என்ன வகையான சமூகத்தை நாம் கட்டமைக்கின்றோம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

”அவர்களுக்கும், அவர்களின்  குடும்பத்தினருக்கு ஏற்படும் உணர்ச்சி மற்றும் உளவியல் தாக்கத்தை நினைத்துப் பாருங்கள்… அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வார்கள். அங்கு அவரது வகுப்பு தோழர்கள் உங்கள் தந்தை ஒரு ‘பயங்கரவாதி’ என்று சொல்வார்கள், அவர் செய்யாத ஒன்றுக்காக… இதனால் ஏற்படும் மன அழுத்தத்தை நாம் கவனிக்கவில்லை.” என்று மதன் லோகர் கூறியுள்ளார்.

இதற்கு இழப்பீடு வழங்குவது மட்டும் போதாது என அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகளுக்கு உள்ளே கூட்ட நெரிசல் மற்றும் மோசமான சுகாதாரம் வழியாக ஒரு ‘மென்மையான சித்திரவதை’ கடைபிடிக்கப்படுகிறது என்று லோகர் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்ற காவலில் உயிரிழந்த பார்கின்சன் நோயாளியான 84 வயது அருட்தந்தை ஸ்டான் சாமி குறித்து பேசிய முன்னாள் நீதிபதி தீபக் குப்தா, ’நாம் அனைவரும் மனிதர்கள் தானா என்றும் மணிப்பூரில், பசு மாட்டின் சிறுநீர் கொரோனாவை குணப்படுத்தாது என கூறியதற்காக, ஒருவர் தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாம் காவல்துறை ஆட்சியில் வாழ்கிறோமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உபா சட்டத்தை தவறாக பயன்படுத்தலாம் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை எனக் கூறிய தீபக் குப்தா, “அரசியலமைப்பின் 142 பிரிவின் கீழ் நீதிமன்றங்கள் உடனடியாக தலையிட்டு, உபா சட்டம் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

உபா சட்டங்கள் இந்த வடிவத்தில் இருக்க கூடாது என குறிப்பிட்ட அவர், “பயங்கரவாதம் கவலையளிக்கும் அம்சமாக இருந்தாலும், பயங்கரவாத தொடர்பான சட்டம் மோசமானதாக இருக்க கூடாது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

”மும்பை தீவிரவாத  தாக்குதல்கள் போன்ற சம்பவம் நடைபெறுவது, கவலை அளிக்கிறது. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தாத வகையில் திருத்தியமைக்கட்டு, விளக்கப்பட வேண்டும்.” என்று தீபக் குப்தா கூறியுள்ளார்.

“உண்மையான 3 விழுக்காடு பயங்கரவாத வழக்குகளில் இருந்து அரசு அதன் கவனத்தை  கருத்து வேறுபாடுகள் பக்கம் திருப்பியுள்ளது. சிறை கம்பிகளுக்குப் பின்னால் பலர் வாழ்க்கையை இழந்துள்ளனர். உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களால் சிறைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் அவர்களில் சிலர் மீது மட்டுமே குற்றம் நிரூபணமாகியுள்ளது.” என்ரு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அப்தப் ஆலம் பேசியுள்ளார்.

”நாம் எந்த மாதிரியான அரசை விரும்புகிறோம் என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் இது. மாற்றுக் கருத்து கொண்டவர்களை உபா சட்டத்தின் பல ஆண்டுகள் சிறையில் அடைப்பது தான் வலுவான அரசிற்கான அடையாளமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைதியான போராட்டங்கள் மற்றும் வன்முறை செயல்களை இரண்டை ஒன்றாக இணைத்து உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசைப் பொருத்த வரையில் மாற்றுக் கருத்துக்கும் பேச்சுரிமைக்கும் அரசுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுபடுவதற்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை என்று அப்தப் ஆலம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத்திற்கும் மனித உரிமைக்கும் இடையிலான போராக அரசு எவ்வாறு மாற்றியுள்ளது எனப் பேசிய முன்னாள் நீதிபதி கோபால கவுடா, மனித உரிமைகள் பாதுக்காக்கப்பட்டால், பயங்கரவாதம் இயற்கையாக அழிந்துவிடும் என கூறியுள்ளார்.

”பாதுகாப்பு முகமைகளுக்கு ஒரு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை உபா போன்ற சிறப்பு சட்டங்கள் வழங்குகின்றன. இது அரசு அத்துமீறல் செய்யக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்குகிறது.” என்று அவர் சுட்டிககட்டியுள்ளார்.

உபா சட்டத்தின் அதிகாரங்கள் குறித்த நீதிமன்ற மறுஆய்வு குறித்து பேசிய அவர், அரசியலமைப்பு வழங்கியிருக்கும் பிணை பெரும் உரிமையை மறுக்கும் சட்டம், அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறியுள்ளார்.

எதிர்ப்பைத் தெரிவித்ததற்காக, மக்கள்மீது அரசு உபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டி, கைது செய்து, சிறையில் வாட்டும்போது நீதிமன்றங்கள் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூற முடியாது என கோபால கவுடா குறிப்பிட்டார்.

அருட்தந்தை ஸ்டான் சுவாமி மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள், அச்சமூட்டும் வகையில் இருப்பதாக கூறிய கோபால கவுடா, அவருக்கு ஜாமீன் பெற உரிமை உள்ளது என்பதை தேசிய புலனாய்வு முகமைகளும் நீதிமன்றங்களும் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டன என கூறினார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்