யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் வளர்ச்சி என்ற பெயரில் குழப்பங்களை விளைவிப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று 93 முன்னாள் அரசு ஊழியர்கள் அடங்கிய அரசியலமைப்பு நடத்தை குழு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில், “பிரஃபுல் படேல் லட்சத்தீவின் நிர்வாகியாக பொறுப்பேற்றதிலிருந்து, லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை (எல்டிஏஆர்), லட்சத்தீவு சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு ஒழுங்குமுறை (பிஏஎச்ஏ அல்லது குண்டர் சட்டம்) மற்றும் லட்சத்தீவு விலங்கு பாதுகாப்பு ஒழுங்குமுறை (எல்ஏபிஆர்) ஆகியவற்றின் சட்டத்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அத்துடன், லட்சத்தீவு பஞ்சாயத்து நிர்வாக விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தமானது, அத்தீவை கடந்து நாடு முழுவதும் பரவலான கவலையை உருவாக்கியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த சட்டத்திருத்தங்ககள் அத்திவு மக்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஆலோசனையின்றி முன்மொழியப்பட்டு, தற்போது அவை இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தேவையான ஒப்புதல்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக லட்சத்தீவில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று கூறி முன்மொழியப்பட்ட, லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறையானது (எல்டிஏஆர்), மாலத்தீவு மாடலை பிரதிபலிக்கிறது. நிலம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியின் கீழ் ரிசார்ட்டுகள், விடுதிகள் மற்றும் கடற்கரை சுற்றுதலாகள் ஆகியவற்றின் விதிமுறைகளை இச்சட்டத்திருத்தம் நிர்வகிக்கும். ஆனால், இந்த இரு தீவுக் குழுக்களுக்கிடையே மக்கள் தொகை, தீவுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பரவல் தொலைவு ஆகிய வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் முன்மொழியப்பட்டுள்ளது.” என்று அக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
‘காவி அரசியல் புறவாசல் வழியாக புகுத்தப்படுகிறது’ – லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக கேரள அரசு தீர்மானம
“லட்சத்தீவு என்ற அழகிய யூனியன் பிரதேசத்தில் வளர்ச்சி என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த குழப்பங்கள் எங்களுக்கு மிகவும் கவலையை அளிக்கிறது என்பதை பதிவு செய்ய நாங்கள் அக்கடிதத்தை எழுதுகிறோம். மேலும், முன்மொழியப்பட்ட சட்டத்திருத்தங்கள், 96.5 சதவீதம் இஸ்லாமியர்களை கொண்ட அத்திவு மக்களின் உணவுப்பழக்கவழக்கங்கள் மற்றும் மதநம்பிக்கைகளை குறிவைக்கின்றன. லட்சத்தீவு விலங்கு பாதுகாப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால், கால்நடை தொடர்பான பொருளாதாரத்தை பெரிய அளவில் கொண்டுள்ள அத்தீவில், மாடு, எருமை போன்றவற்றின் இறைச்சி விற்பனைக்கு தடை ஏற்படும்.” என்று முன்னாள் அரசு ஊழியர்கள் அடங்கிய அரசியலமைப்பு நடத்தை குழு பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.