Aran Sei

உபா சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – முன்னாள் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு மக்களுக்கு கடிதம்

ட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில்  (உபா, யுஏபிஏ) இருக்கும் சில குறைபாடுகள் மற்றும் ஓட்டைகளால், அது அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் தவறாக பயன்படுத்தபடுகிறது என முன்னாள் குடிமைப் பணி அதிகாரிகள் நடத்தும் அரசியலமைப்பு நடத்தை குழு (சிசிஜி) இந்தியக் குடிமக்களுக்குத் திறந்த மடல் எழுதியுள்ளது.

சட்டம் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க, அவற்றில் திருத்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

”இந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள உத்திரவாதங்களை மீறுவதாக உள்ளது. இது போன்ற சட்டங்கள் ஐம்பது ஆண்டுகளாக சட்டப்புத்தகங்களில் இருந்து வந்தாலும், அதில் அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்கள், அவற்றைக் கொடூரமானதாகவும் அடக்குமுறையானதாகவும், அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினரால் தவறாக பயன்படுத்துவதற்கு இணக்கமானதாகவும் மாற்றியுள்ளது.” என சிசிஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் தவறாக பயன்படுத்தபட்டதற்கு மாணவர்கள் தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால் கைது செய்யப்பட்டதே உதாரணம் என சுட்டிக்காட்டிய சிசிஜி, எல்கர் பரிஷத் வழக்கில் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளது.

சட்டத்தின் ’தீவிர சரத்துகளுக்கு’ ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கங்கள் இரண்டுமே பொறுப்பு என்றாலும், 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் இந்தச் சட்டத்தின் கீழ் கைதுகள் அதிகமாகியுள்ளன என சிசிஜி குற்றம்சாட்டுகிறது.

சமீபத்திய கருத்தரங்கில் உபா சட்டம் இந்த வடிவத்தில் இருக்க கூடாது என பல ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்ததை சுட்டிக்காட்டிய சிசிஜி, ”நாகரீகமான, குறிப்பாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில் இது போன்ற சட்டங்களுக்கு இடமில்லை என்று நாங்கள் நம்புகிறோம்” என அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

”ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் ’ஜனநாயகமும் சுதந்திரமும்’ இந்திய நெறிமுறைகளின் ஒரு பகுதி என்று பிரதமர் பேசியதை சுட்டிக்காட்டிய சிஜிஜி, உபா சட்டத்தின் தற்போதைய வடிவம், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற சட்ட வல்லுனர்களின் கருத்தை ஏற்று, அதை திருத்த அரசு முன்வர வேண்டும். சட்டத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் புதிய திருத்தம், பயங்கரவாதம் தொடர்பான கவலைகளைத் தீர்க்கும் அதே நேரத்தில், இந்திய அரசியலமைப்பின் 19 வது பிரிவு உறுதியளித்துள்ள கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.” என சிசிஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு 108 அரசின் முன்னாள் குடிமைப் பணி அதிகாரிகள் கையொப்பமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : The Wire

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்