Aran Sei

ஓவைசி வீட்டைத் தாக்கிய இந்து சேனா அமைப்பினர் – நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பில்லையா?

credits : new indian express

டெல்லி அசோகா சாலையில் உள்ள ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவரும் அசாதுதீன் ஓவைசியின் உத்தியோகபூர்வ இல்லத்தின்மீது தாக்குதல் நடத்திய இந்து சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களென கருதப்படும் ஐந்து பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (செப்டம்பர் 21) மாலை நடந்த இச்சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள ஓவைசி, “தீவிரவாதிகளால் எனது டெல்லி வீடு இன்று தாக்கப்பட்டது. அவர்களின் கோழைத்தனம் எல்லோருக்கும் நன்றாக தெரியும். வழக்கம்போல் அவர்கள் ஒரு கும்பலாகத்தான் வந்தார்கள். நான் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து, கோடாரிகளுடனும் கட்டைகளுடனும் ஆயுதத்தோடும் வந்தார்கள். என் வீட்டின் மீது கற்களை வீசினர். என் பெயர்ப்பலகை அடித்து நொறுக்கினார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அக்கும்பல் வகுப்புவாத முழக்கங்களை எழுப்பியதாகவும், தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு பாதுகாப்பற்றதாக இருக்கிறதென்றால், இதன் வழியாக அமித் ஷா என்ன சொல்ல வருகிறார்?” என்று டிவிட்டரில் ஒன்றிய உள்துறை அமைச்சரை டேக் செய்து ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக புது டெல்லி காவல்துறை துணை ஆணையர் தீபக் யாதவ் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து, காவல்துறை அவர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளது.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்