6-3-1967 அன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டபின், பேரறிஞர் அண்ணா முதன் முதலாக மக்களுக்கு ஆற்றிய உரை:
தோழர்களே!
உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று சட்ட மன்றத்தில் உறுதிமொழி தெரிவித்துப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நாட்டு மன்னர்களாகிய நீங்கள் பிறப்பித்த ஆணையினை ஏற்றுக் கொண்டு அவர்கள் சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர். அவர்களின் துணையுடன் நானும், என்னுடன் உள்ள மற்ற அமைச்சர்களும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளோம். மன்னர்களாகிய உங்களிடம் எமது வணக்கத்தையும், நன்றி அறிதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
புனிதக் கடமை ஆற்ற
பல ஆண்டுகளாகத் தொடர்ந்து என்னிடமும் என் தோழர்களிடமும் பாசம் கலந்த பரிவுகாட்டி வருகின்றீர்கள். இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், நாடாளும் பொறுப்பினையும் தந்துள்ளீர்கள். தங்கள் அன்பினையும் ஆதரவினையும் மிகப் பெரிய அளவுக்குப் பெற்றிருக்கும் நான், நெஞ்சு நெகிழ்ந்திடும் நிலையிலேயே பேசுகிறேன். தங்களின் மேலான நம்பிக்கைக்கு முழுவதும் ஏற்றவனாக நடந்து ‘கொள்ள வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியைத் துணைகொண்டு கடமையைச் செய்திடுவதில் ஈடுபடுகிறேன். என்னைச் சுற்றிலும் கனிவு நிரம்பிய கண்கள், என்னைச் சுற்றிலும் கை கொடுக்கும் கரங்கள், என்னை ஊக்குவிக்க, எந்தப் பக்சுமிருந்தும் அன்பு மொழிகள், துணை நிற்கிறோம், வழி காட்டுகிறோம், முறை
அறிவிக்கிறோம். குறை களைகிறோம். தயக்கம் வேண்டாம். பொறுப்பினை நிறைவேற்றிடுக. என்று தகுதிமிக்க தமிழகத்தார். கூறிடுவது, செவிக்குச் செந்தேனாக இருக்கிறது. பொறுப்பினை ஏற்றுக் கொண்டேன். ஒரு புனிதக் கடமையில் ஈடுபடுகிறோம் என்ற உணர்ச்சியுடன் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
எதிர்நோக்கியுள்ள எண்ணற்ற பிரச்சினைகள் :
நான் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பது தமிழ்நாட்டில் வழிவழி வந்த வல்லவர்கள், வித்தகர்கள் நிரம்பிய தமிழ்நாட்டில், காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை போன்ற ஆறுகளும் அருவிகளும் பண்பாடி வளமளித்திடும் தமிழ்நாட்டில் ஆயிரம் தொழில்களில் ஈடுபட்டு, நாட்டுக்குச் செல்வத்தை ஈட்டித்தரும் பாட்டாளிகள் நிரம்பிய தமிழ்நாட்டில், பாட்டுமொழியாம் தமிழ் மொழியுடன் இழைந்துள்ள பண்பாடு சிறந்திடும் தமிழ் நாட்டில், பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாவலர் கொண்டாடிடும் தமிழ்நாட்டில், அதனை எண்ண எண்ண இனிக்கிறது. ஆனால்? ஆமாம். அந்தக் கவலைத் தந்திடும் சொல் வரத்தான் செய்கிறது. ஆனால், எத்தனை எத்தனை சிக்கலுள்ள பிரச்சினைகள் நெளிந்து கொண்டுள்ள தமிழ்நாடு என்பதனை எண்ணும்போது கவலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைகளைச் சிந்திக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், போதுமான உறுதியும் திறமையும், துணையும் தோழமையும் தொடர்ந்து கிடைத்திட வேண்டுமே என்பதனை எண்ணும்போது, நீங்கள் உடன் இருக்கிறீர்கள் என்ற நினைவுதான் கவலையை ஓட்டுகிறது. கடமையை செய்வோம் என்ற உறுதியைத் தருகிறது.
உங்களுக்கா நான் என்பது மட்டுமல்ல நண்பர்களே, உண்மையைச் சொல்லுவதானால், உங்களால் நான் – அதனை உணருகிறேன் – மறந்திடுபவனும் அல்ல நான். உழைப்பவர் வாழ்வு உயர்ந்திட வழிவகுப்போம்
ஆனால் என்னிடம் ஒப்படைத்துள்ள வேலையின் கடினத்தையும் ஆண்டு பலவாகக் குளிந்து கெட்டிப்பட்டு விட்டுள்ள சீர்கேடுகளையும். சிக்கல்களையும் மறந்துவிடாதீர்கள். கடமையை நான் செய்து முடித்திட உங்கள் ஒவ்வொருவருடைய முழு ஒத்துழைப்பும் தேவை என்பதை மறந்துவிடாதீர்கள். ஆட்சி நடத்திட ஆணை பிறப்பித்துவிட்டோம். இனி நாம் இல்லாமலே கூட ஆட்சி செம்மையாக நடந்திடும் என்று இருந்துவிட
மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் துறையில் இருந்து நற்பணியாற்றினால் மட்டுமே, என் வேலை நடந்திடும். நாடு சீர்படும்.
நாட்டு ஆட்சி செம்மையானதாகிட, நானும் எனது நண்பர்களும் அமைச்சரகத்தில் அமர்ந்து பணியாற்றினால் மட்டும் போதாது; அரசு நடந்திட ஆயிரமாயிரம் திறமைமிகு அலுவலாளர்கள் பணியாற்றினால் மட்டும் போதாது, ஆட்சி , வயலில், தொழிற்சாலையில், அங்காடியில் பணிபுரிந்திடும் ர்கள் அனைவரும் “ஆட்சி நடத்திடுவோர் நாமே” என்ற உணர்வுடன் தத்தமது – கடமையினைச் செய்ய வேண்டும். கற்றறிவாளர் எம்மை நல்வழி நடந்திடச் செய்ய வேண்டும். இதழ் நடத்துவோர் உடனிருந்து முறை கூறிட வேண்டும். இவர் யாவரும் சேர்ந்து நடந்திடுவதே அரசு – நாங்கள் உங்களாலே அமர்த்தப்பட்டவர்கள்.
வயல்களிலே கதிர் குலுங்கிடின், சர்க்கார் அலுவலகங்களில் மகிழ்ச்சி துள்ளும், தொழிற்சாலைகளிலே தோழமை மலர்ந்து, நீதியும் நிம்மதியும் கிடைத்து உற்பத்தி பெருகிடின், நாட்டு நி நிலை உயர்ந்திடும். அங்காடியிலுள்ளோர், கொள்வன கொடுப்பன என்பவை நேர்மையின் அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும் என்று இருந்திடின், அகவிலையும் பதுக்கலும் அழிந்துபடும். பொதுமக்களின் வாழ்வு சீர்படும். நாட்டின் நிலை உயர்ந்திட பணியாற்றிடவே நாம் என்ற உணர்வுடன் மாணவ மணிகள் கல்விக்கூடங்களில் பயிற்சி பெற்றிடின், நாடு மேம்பாடடையும், இவை எல்லாவற்றின் கூட்டே ஆட்சி. சில மண்டபங்களிலே மட்டும் செய்யப்படுகிற காரியமல்ல ஆட்சி. நாட்டு ஆட்சி, வீட்டுக்கு வீடு காணப்படும் பண்பைப் பொறுத்திருக்கிறது.
இல்லாமை, போதாமை நீக்கப்பட்டு வலியோர் எளியோரை வாட்டிடும் கொடுமை ஒழிக்கப்பட்டு எல்லோர்க்கும் ஏற்றம், இன்பம், உறுதி அளிக்கப்பட்டு, நாடு பக்காடாகத் திகழ்ந்திட வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு, இந்த நிலை பெறுவதற்கான பணியில் ஒரு சிறு பகுதியையேனும் நாம் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். எல்லா முனைகளிலும் பற்றாக்குறை மிரட்டியபடி இருப்பதைக் காண்கிறேன். பல்வேறு முனைகளில், தவறாள்ள நோக்கம், தனக்குத்தான் என்ற எண்ணம் மேலோங்கி
இருக்கக் காண்கிறேன். பொது நலனில் மட்டுமே தனி மனிதர் நலன் காண முடியும் என்பது ஏட்டுக்கு நாட்டுக்கு அல்ல என்ற எண்ணம் கொண்டோர் உலவிடக் காண்கிறேன்.
தடைக் கற்கள் நீங்கிடின்:
பிளவுகள் ஏற்படுவதற்கான முறைகளையும் எண்ணங் களையும் விட்டொழிக்க மனமற்று, இருப்பவர்களைக் காண்கிறேன். கூட்டு முயற்சிக்குப் பல தடைக் கற்கள் போடப் பட்டிருப்பதைக் காண்கிறேன். இவைகளை நீக்கிடின் நாடு எத்தகைய எழில்பெறும் என்பதை எண்ணுகிறேன். உம்மை அழைக்கிறேன் நண்பர்களே, நம்பிக்கையுடன் அழைக்கிறேன். இந்தத் தூய தொண்டாற்ற வாரிர் என்று அழைக்கின்றேன். ஒவ்வொருவரிடமும் உள்ள அறிவும் ஆற்றலும், கிடைத்திடும் நேரமும், வாய்ப்பும், பெற்றிடும் வசதியும், நினைப்பும் இதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். உங்களோடு சேர்ந்து இதற்காக உழைத்திட நானும், பொறுப்பேற்றுக் கொண்டுள்ள என் நண்பர்களும் காத்திருக்கிறோம்.
உணவுக்கே உழல்கிறோம். அறிவீர்கள் – அறிந்த பின் செய்திட வேண்டியது என்ன? இந்த நிலைமைக்கான காரணம் காண்கிறோம். குறை களைகிறோம். முறை வகுக்கின்றோம், அரசாள்வோர் என்ற நிலையில், ஆனால் வகுத்திடும் முறைதான். வெற்றிபெற உங்களைத்தான் நம்பியிருக்கின்றோம். நாமாகத் தேடிப் பெற்றுக்கொண்ட அரசு இது. நம்முடைய துணையை நம்பியே இயங்கும் அரசு இது. எனவே இது செம்மையாக நடந்திட, நாம்தான் துணையிருக்க வேண்டும் என்று ஒத்துழைத்திட முனைந்து நின்றிட வேண்டுகிறேன்.
உணவு உற்பத்தி பெருகிடவும், உற்பத்தியாவது. உண்போருக்கு முறையாகக் கிடைத்திடவும், கிடைப்பது அடக்கமான விலையில் நின்றிடவும், முறைகள் யாவை, என்பதறிந்திட விற்பனையாளர்களிடம் கருத்தறிந்து வருகின்ற செயலிலே ஈடுபடு முன்னர் சிந்தித்தல் தேவை அல்லவா? அதிலே
இப்போது கவனம் செலுத்தி வருகிறோம். உழைப்பவர் வாழ்வு உயர்ந்திட, வழி யாது என்பதை ஆராய்ந்து வருகின்றோம்.
மக்களுடன் மிக நெருங்கிய தோழமைத் தொடர்பு கொண்டதாக நிர்வாகம் இருந்திட என்ன செய்ய வேண்டும். என்பது பற்றி யோசித்து வருகின்றோம்.
ஊழலும் ஊதாரித்தனமும் போக்கப்பட என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது பற்றிக் கலந்து பேசி வருகின்றோம். எங்கள் துறையிலிருந்து என்னென்ன செய்ய இயலுமோ அவற்றைச் செய்திடத் தயங்கிடோம். உடனிருந்து, எமது முயற்சிக்கு வெற்றி கிடைத்திடச் செய்வது உமது கடமை..
இருபதாண்டுகளாகக் காணாத நிலை
புதிய அரசு அமைந்திருக்கிறது இங்கு… புதிய அரசு மட்டுமல்ல, அரசியலிலும் புதிய பிரச்சினையை எழுப்பிவிடும் நிலையில் உள்ள அரசு, இங்கும், கேரளத்திலும், வங்கத்திலும், பீகாரிலும், பஞ்சாபிலும், ஒரிசாவிலும் ஆட்சிப் பொறுப்பில் காங்கிரசல்லாத கட்சியினர் உள்ளனர். வேறு சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அமைந்திருக்கிறது. மத்திய சர்க்காரில் காங்கிரஸ் கட்சி அரசோச்சுகிறது. இந்த நிலை கடந்த இருபதாண்டுகளாக நாடு காணாத நிலை.
இந்த நிலை காரணமாக, சிக்கல்கள், எரிச்சல்கள், மோதுதல் ஏற்பட்டு விடுமோ, குழப்ப நிலை வளர்ந்திடுமோ என்ற அச்சமும் ஐயப்பாடும் கொண்டிடுவோர் உள்ளனர். தமிழகத்தில் அரசோச்சும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கூறிக் கொள்கிறேன். இங்கு அமைந்துள்ள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை, அந்த நிலைமையை நிச்சயமாக உண்டாக்காது. மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உள்ள உறவு முறைகள் அந்த முறைகள் செயல்படுத்தப்படும் வகை என்பன பற்றிய புதிய சிந்தனையைக் கிளறவும், செம்மையானதாக்கப்படவும் இன்று பல இடங்களில் காங்கிரசல்லாத அரசு அமைந்திருப்பதை ஒரு நல்ல, தேவையான பயன்தரத்தக்க வாய்ப்பாகக் கருத வேண்டுமே யொழிய, கை பிசைந்து கொண்டு, கலக்கமடைவது தேவையற்ற தாகும்.
என்றென்றும் எல்லா மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒரே கட்சியின் ஆட்சியில்தான் இருக்கும் என்று அரசியல் நுட்பம் அறிந்த யாவரும் கூறமாட்டார்கள், கருதிட மாட்டார்கள். எதிர்பார்த்திட மாட்டார்கள்.
பண்புமிக்க நுண்ணறிவு:
ஆகவே இங்குத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் வேறு இடங்களில், பல கட்சிகள் கொண்ட கூட்டு ஆட்சியும் ஏற்பட்டிருப்பது கண்டு, திகைப்பு கொள்ளாமல், எரிச்சல் அடையாமல், கசப்பு கொள்ளாமல் மத்திய சர்க்காரை
நடாத்திடும் காங்கிரஸ் அரசு நடந்து கொள்ளுமானால், எரிச்சலும், மோதலும் எழ வேண்டிய நிலையே வராது. மிகச் சிறந்த, பண்புமிக்க ஆட்சிமுறை நுண்ணறிவு இதற்குத் தேவை. மற்றவர்களின் கருத்தறிவதிலே ஓர் அக்கறை, அவர்களின் முறையீட்டைக் கேட்பதிலே ஒரு கனிவு, அவர்களுக்கான காரிய மாற்றுவதிலேயும் துணை நிற்பதிலேயும் ஓர் ஆர்வம், இவை எல்லாவற்றையும்விட, ஒருவர் மனதை மற்றவர் புரிந்து கொள்வதிலே தனித்திறமை, இன்சொல், நட்பு, பரிவு ஆகியவை தேவை.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.