Aran Sei

பெண் உரிமைக்கான போராட்டமே பாசிச எதிர்ப்பின் முதல் குரல் : ஜெ.காவ்யா

‘I ask no favour for my sex. All I ask of my brethren is that they take their feet off our necks.’ – அமெரிக்க வழக்கறிஞரும், உச்சநீதிமன்ற நீதிபதியும் ஆன ரூத் பாடர் ஜின்ஸ்பெர்கின் இவ்வரிகளில் இருக்கும் ஒவ்வொரு சொல்லும் பாலின பாகுபாட்டினையும் அதன் அடிப்படையில் செய்யப்படும் அதிகாரத்தையும் அழுத்தமாக காட்டுகிறது.

தனியுடமை, அரசு, வணிகம் ஆகியவை இல்லாமல், சுற்றித் திரிந்த மானுடர்கள் குடிமை சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் ஒருவர் இன்னொருவர் மேல் ஆதிக்கம் செலுத்துவது, அடக்கி ஆள்வது என்பது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. நிலப்பரப்பு, வாழ் நிலை ஆகியவற்றை பொறுத்து ஆதிக்கம் செலுத்துபவரும் செலுத்தப்படுவோரும் மாறிக் கொண்டே இருப்பர்கள்.

ஆனால் உலகின் அனைத்து கலாச்சாரத்திலும் அனைத்து நாகரீகத்திலும் பொதுவான ஒரு விடயம் பெண்கள் மீதான அதிகாரம்,  அவர்கள் உடல் மீதான அதிகாரம், அவர்கள் வாழ்வின் மீதான அதிகாரம். இந்த அதிகாரத்தைக் கொண்டே மனித சமூகத்திற்கு எதிரான பல அமைப்புகளால் நீடித்து இருக்க முடிந்தது. சாதி அமைப்பு, மத அமைப்பு, இனவாதம், பேரரசுகள் என பெண்களின் பாலியல் ஆற்றலை கட்டுப்படுத்தியே பல கட்டமைப்புகள் தங்கள் வேர்களை தக்க வைத்து கொண்டன.  இந்த அனைத்து அமைப்புகளையும் ஒன்றடக்கிய இவற்றின் உச்சமாக விளங்கும் பாசிசமும் இதையே தான் பயன்படுத்தியது, இப்பொழுதும் பயன்படுத்துகிறது.

பாலியல் பாகுபாட்டின் அரசியலை புரிந்து கொள்ள நாம் நம்மை சுற்றியுள்ள சமூகத்தின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சர்வாதிகாரம் உருவாகக் காரணம் சர்வாதிகாரியோ சர்வாதிகார கட்சியோ அல்ல. சர்வாதிகாரம் உருவாக அவர்களை பின் தொடரும் நாட்டின் பெரும்பான்மை மக்களே காரணம்.

உலகில் ஜனநாயகமே சர்வாதிகாரத்திற்கு வழிவகுத்துள்ளது. “ஜெர்மனியிலும், இத்தாலியிலும் பெருவாரியான மக்கள் தங்கள் நலனுக்கு எதிரான ஒரு அரசுக்கு எப்படி ஆதரவு அளிக்கிறார்கள் என அக்காலத்து சிந்தனையாளர்கள் அனைத்து புத்தகங்களிலும் விடை தேடினர், ஆனால் கிடைக்கவில்லை” என்று ‘the mass psychology of fascism’ நூலை எழுதிய வில்ஹெம் ரெய்ச் குறிப்பிடுகிறார்.  ஆதலால் அத்தகைய பாசிசம் கடினமான பொருளாதார தத்துவத்திலோ, அறிவியலிலோ இல்லை. அது நிலைத்திருப்பதற்கான அடித்தளம் சாமானியனுக்கு முக்கியமான குடும்ப அமைப்பே. சாமானியன் கையாளும் உணர்ச்சிகளான மதம், பற்று, ஆணாதிக்கம், குடும்ப அதிகாரம் இவற்றாலேயே அவை செய்யப்பட்டுள்ளன.

குடும்ப அமைப்பு முறை என்பது அதிகாரத்தின் முழு உருவமாக இருக்கிறது. குடும்பத் தலைவர் குடும்பத் தலைவியின் மேல் செலுத்தும் அதிகாரம். அவர்கள் பிள்ளையின் மேல் செலுத்தும் அதிகாரம் அதாவது கேள்வி இன்றி கட்டுப்படுத்தல். இந்த கட்டுப்படுத்தல் என்பது பெரும்பாலும் பெண்களை நோக்கியே இருக்கும். அவர்கள் மீதான உழைப்புச் சுரண்டலை, உரிமை பறிப்பை அவர்களுக்கான கடமை என வரையறுக்கும்  அமைப்பு முறையே குடும்பம் மற்றும் கலாச்சாரம், என்பதே அனைவரது ஒருமித்த கருத்தாக இருக்கிறது. இது அரசு முதல் ஆண்டான் வரை பொருந்தும்.

இதில் இருக்கும் முரண் என்னவென்றால் இந்த கட்டுப்படுத்தலை பெண்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். அதை பிற பெண்களை பின்பற்றச்  சொல்லி உள்வாங்கப்பட்ட பாலினவாதத்தை (internalised sexism) பின்பற்றுகிறார்கள்.

இந்த  சமரசம் இல்லாத கட்டுப்படுதல் எவ்வாறு  சாத்தியம் ஆகிறது? இதற்கு பாலியல் தடைகளே காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது பெண்கள் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருப்பது, தமது சுயத்தை உணராமல், சுதந்திரத்துக்கு அஞ்சுபவர்களாய், எதிர்க்கும் ஆற்றலை இழந்து தொடர்ந்து தன்னை யாரோ ஒருவருக்கு ஒப்பு கொடுப்பவர்களாய், பிற்போக்குவாதிகளாய், அதீத உணர்ச்சிவயப்பட்டவர்களாய், பக்தி மிகுந்தவர்களாய் மாற்றுகிறது.

பாலியல் உணர்வுகளை பாவமாக, தார்மீகம் அற்றதாக, அதைக் கட்டுப்படுத்துவதே ஒழுக்கமாக மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது. இந்த வேலைகளை மதங்கள் தொடக்கத்தில் இருந்தே செய்து வருகின்றன. மதமும் குடும்பமும் பின்னிப் பிணைந்து, பாலியல் ஆசைகளையும் உணர்வுகளையும் முற்றாக அடக்கு முறைக்கு உள்ளாக்கி பாலியல் உளைச்சலுக்கு அவர்களை அறியாமலேயே இட்டு செல்கிறது. இது குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்குகிறது.

பெரும்பான்மையான பெண்கள் தங்களது வாழ்வினை தீர்மானித்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அவர்கள் அதை ஏற்க மாட்டார்கள். சபரிமலை தீர்ப்பிற்கு பெண்களிடம் இருந்து அதிக எதிர்ப்பு வந்ததை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். பாலியல் உரிமை மறுப்பு அவர்களை சமூக உணர்வோ, தன்னிலை உணர்வோ, சுயநிர்ணயமோ அற்றவராக்கி அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபாடு இல்லாதவராக்கி அவர்களே அவர்களின் அடிபணிதலை தூக்கிப் பிடிக்கச் செய்கிறது.

இந்த அதிகார கட்டுமானம் முன்வைக்கும் எதிர்ப்பற்ற ஒப்புவித்தல் சர்வாதிகாரத்திற்கான அரசியல் தேவை ஆகிறது. இதுவே முதலீட்டிய உற்பத்திக்கும் தேவைப்படுகிறது. இந்த முதலீட்டிய உற்பத்தி ஆணாதிக்கம் மூலமாக சர்வாதிகாரத்தை நிலை நாட்டி கொள்கிறது. ஆகவே ஆணாதிக்கம் நிறைந்த குடும்ப அமைப்பு முறை மிகுந்த அவசியமாகிறது. ஆக ஒவ்வொரு குடும்பமும் பாசிச அரசின் முழுவெண்பாகமாகவே (aliquot part) உள்ளது. ஆகவே பாசிசத்தை நிலைநாட்ட விரும்புவோர் குடும்ப அமைப்பினை எப்பொழுதும் கொண்டாடுகின்றனர்.

குடும்ப அமைப்பில் ஆண்களுக்கு பெண்களுக்கு என பணிகளையும் பொறுப்புகளையும் கறாராக வரையறுக்கிறார்கள். பொது வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, எவ்விதத் திறமையும் அறிவும் தேவைப்படாத, உடல் தசை கொண்டு செய்யும் வேலைகள் பெண்களுக்கானதாகவும் போர் புரிவது, அதீத வீரம் காட்டுவது, பெண்களை வழிநடத்துவது ஆகியவற்றை ஆண்களுக்கானதாகவும் பிரிக்கிறார்கள். இதை அவர்கள் நிகழ்த்தியும் காட்டி இருக்கிறார்கள்.

முசோலினி, ஹிட்லர் ஆகிய இருவருமே குடும்பத்தையும் அதை பேணுவதற்கான பெண்களின் பொறுப்பினையும் மிகைப்படுத்தியுள்ளனர்.  இத்தாலியில் 1929-ல் வந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.  பெண்களுக்கான கல்விக் கட்டணத்தை இருமடங்காக்கினர். எந்த நிறுவனத்திலும் பெண்கள் 10% மேல் இருக்கக் கூடாது என வரிசையாக பல சட்டங்களால் சமூகத்தை குப்பை ஆக்கினர்.

இத்தாலி, பெண்களுக்காக வைத்திருந்த கோஷம் ‘பிள்ளை பெறு’ (Give Birth) என்பதே. ஜெர்மனியில் இதே காலகட்டத்தில் இவ்வாறான பல சட்டங்களுடன் கூடவே ‘ஜெர்மன் தாய் விருது’ (the cross of honour of german mother) என்ற ஒன்று அதிக ஆரிய வாரிசுகளை பெற்றெடுக்கும் பெண்களுக்கு வழங்கப்பட்டது.

தங்கள் இன்ப துன்பங்களை தியாகம் செய்து நாட்டுக்கான வீரர்களை பெற்று தருவதே மகத்துவம் மிக்கதாக அதுவே அவர்கள் நாட்டுக்கு தொண்டாற்றும் வழியாக போதிக்கப்பட்டது. இந்த வறட்டு நாட்டுப்பற்று அனைவரிடமும் வரவேற்பும் பெற்றது, குறிப்பாக பெண்களிடம்.

முன்னர் மதம் செய்த அதே வேலையை இப்போது நாடு எனும் பெயரில் செய்தார்கள். இவ்வாறாக முதலீட்டிய உற்பத்தியில் இருந்த பொருளாதார சுரண்டல் பாசிஸ்டுகள் கைகளில் சமூக சுரண்டலாக, உடல் சுரண்டலாக, அரசியல் சுரண்டலாக, அறிவுசார் சுரண்டலாக, உளவியல் சுரண்டலாக உருவம் பெற்றது.

இந்த நிலைமையை விவரிக்கும் ஜெர்மனிய எழுத்தாளர் பிரெக்ட் ‘பாசிஸ்டுகளுக்கும் பெண்களுக்கும் இருக்கும் உறவு பாலியல் தொழில் செய்வோருக்கும் அவர்களது முதலாளிக்கும் இருக்கும் உறவு போன்றது. பெண்களை தெருவில் நிறுத்தி அவர்களிடம் இருந்து தனக்கான லாபங்களை எடுத்து கொள்பவர்கள் பாசிஸ்டுகள்’ என முகத்தில் அறைந்தாற் போல் கூறுகிறார்.

முதல் உலகப் போருக்கு பிந்தைய பொருளாதார பாதுகாப்பின்மை, அரசியல் ஸ்திரமின்மை, ஜனநாயக நிறுவனங்களின் தோல்வி இவை அனைத்தும் மக்களின் உளவியலில் பாதிப்பு ஏற்படுத்தின. அதனூடே முதலீட்டிய உற்பத்தி கொண்டு வந்த சமூக மாற்றம், குடும்ப மாற்றம், அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை ஆகியவை மக்களிடையே வருங்காலத்தை குறித்த பீதியை உருவாக்கி, தங்கள் வாழ்க்கைக்கான சுதந்திரத்தை துறந்து முழு பொறுப்பையும் வேறொருவரிடம் ஒப்படைக்க  தயார் செய்து விட்டது எனக் கூறலாம். அதுவே இந்த வெறுப்புடன் கலந்த பாலியல் வரையறைக்கும் தேச பக்திக்கும் அந்த மக்களை தள்ளி இருக்கலாம்.

‘எப்பொழுதெல்லாம் ஜனநாயகம் உறுதியற்று இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் சுதந்திரம் குற்றவாளி கூண்டில் ஏற்றப்படும்’ என மனித உரிமை செயற்பாட்டாளரும் எழுத்தாளருமாகிய  தியோ ஹோரேஷ் கூறியுள்ளார். புறவாழ்க்கை நலிந்து இருக்கையில் அதன் வெறுப்பு, உண்மை காரணிகளை அறியவிடாது, கோபத்தை சமூக மாற்றத்தின் மீது திரும்புகிறது. இந்த வெறுப்பு அவர்களுக்கான நிம்மதியான வாழ்க்கை என்பது முன்னோர்கள் வாழ்ந்ததில் உள்ளது என நம்ப வைக்கிறது. இது அவர்களை பிற்போக்குவாதிகளாக மாற்றி அறிவியலை புறம் தள்ளி கற்பனையான பழமைக்குள் எடுத்து செல்கிறது. பழமைவாத மீட்டுருவாக்கத்தை உண்டாக்குகிறது. இந்த உணர்வினை கொழுந்து விட்டு எரியவைப்பதன் மூலம் தங்களுக்கான மக்கள் செல்வாக்கை பாசிஸ்ட்கள் பெற்று கொள்கிறார்கள்.

இந்த பழமைவாதம் அனைத்தும் பெண்களுடைய சுதந்திரத்துக்கு எதிரானவை என்பது அனைவரும் அறிந்ததே. ஆதலால் இந்த பழைமை மீட்டுருவாக்க செயல்முறை பெண்ணிய எதிர்ப்பில் தொடங்குகிறது. யுகன் வெபர்  என்னும் அமெரிக்க வரலாற்றாளர் ‘Fascism always emerges in response to the rising power of women’ (பாசிசம் எப்பொழுதும் பெண்களின் அதிகரிக்கும் செல்வாக்குக்கான எதிர்வினையாகவே  தோன்றுகிறது) என்று கூறியுள்ளார். ஆக பெண்ணடிமைத்தனமே சர்வாதிகாரத்தின் அச்சாணியாக இருக்கிறது. பெண்ணடிமைத்தனம் இல்லையேல் சர்வாதிகாரத்தால் தாக்குப்பிடிக்க இயலாது.

இயல்பாகவே பெண்களை வாரிசுகளை பெற்றெடுக்க பிறந்தவர்களாகவும், தியாகமே அவர்களது கடமையாகவும் சித்தரிக்கும் இந்திய குடும்ப அமைப்பும் ஏற்றத்தாழ்வான சாதிய சமூக அமைப்பும் பாசிசத்தின் வேர்களை ஏற்கனவே தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சமூக படிநிலை மேலும் உந்தப்பட்டு அவற்றோடு முதலீட்டிய உற்பத்தியின் ஏற்றத்தாழ்வும் அதனால் உருவாகும் சமூக வெறுப்பும்  சேரும் பொழுது, இந்தியாவில் அதன் விளைவு அனைத்து நாடுகளை விட மிக மோசமானதாக உள்ளது. அதற்கான முதல் களபலி பெண்களாகவே இருக்கின்றனர்.

தற்பொழுது அந்த எதிர் பெண்ணியம் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் பொருளாதார அமைப்பினால் ஏற்படும் வாய்ப்பின்மையும் அன்றாட போராட்டங்களும் பெண்களுக்கு எதிரான வெறுப்பாக மாறி உள்ளது (misogyny).

 • பெண்களுக்கு ஒழுங்காக வாகனம் ஓட்டத் தெரியாது என நண்பர்களுடன் கலாய்ப்பதில் தொடங்கி,
 • டிக் டாக் வீடியோவில் பெண்களை துப்பட்டா போடச் சொல்லுவது,
 • மொரட்டு சிங்கிள் என பெண்களை நிராகரிக்க வேண்டியவர்களாக சித்தரிப்பது,
 • தொடர்ந்து பெண்களை திட்டும் பாடல்களை வெளியிடுவது,
 • லிட்டில் பிரின்சஸ் என்று தொடர்ந்து இக்கால பெண்களுக்கு சமைக்க தெரியாததால் அவர்கள் பெண்கள் அல்ல என்பது போன்று மீம் சீரீஸ் வெளியிடுவது,
 • பெண்களாக இருப்பதால் தான் வேலை கிடைத்தது என திறமையை கொச்சைப் படுத்துவது,
 • ஆண்கள் உரிமையை யாரும் பேசுவதில்லை என கோஷம் போடுவது,
 • புடவை கட்டுவதை glorify செய்வது,
 • தோலும் முகமும் மட்டுமே அவள் என நினைத்து பார்த்த மாத்திரத்தில் காதலில் விழுந்து stalk செய்வது,
 • காதலை நிராகரிக்க உரிமை இல்லாதவளாக அவளை நிறுத்துவது,
 • அப்படியே செய்தால் அவள் மீது உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வன்முறையை தொடுப்பது

என தற்போது சர்வ சாதரணமாக கடந்து செல்லும் ட்ரெண்ட் அனைத்துமே பழமைவாத மீட்டுருவாக்கத்திற்கான படிக் கற்களே.

 • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய பெண்களுக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்,
 • விவசாய போராட்டத்தை ஆதரித்து ட்வீட் செய்த ரிஹானா மீது ஆடை மற்றும் நடத்தை ரீதியாக அவதூறு செய்தது,
 • பலாத்காரம் செய்த பெண்ணையே மணம் செய்து கொள்ள சொன்ன உச்சநீதிமன்றம்,
 • கத்துவா உன்னாவ் சூரத் என தொடரும் உறையவைக்கும் பாலியல் குற்றங்கள்,
 • விடுதியில் பெண்களின் உள்ளாடையை கழற்றி மாதவிடாய் நாளா என சோதித்தது,
 • தொடர்ந்து நாட்டின் அனைத்து கல்லூரிகளிலும் விடுதிகளிலும் பெண்களுக்கான கட்டுப்பாடுகளை இறுக்கம் ஆக்குவது,
 • லவ் ஜிஹாத் எனக் கூறி பெண்களை பொம்மைகள் ஆக்குவது,
 • எங்கு சென்றாலும் பெண்களை தாய்மார்கள் என்றும் துர்க்கை என்றும் பேசிக் கொண்டு செல்லும் நாட்டின் பிரதம மந்திரி

என அரசும் அதன் நிறுவனங்களும் மாறி மாறி பெண்களின் மேலான ஆதிக்கத்தை இன்னும் பலமாக கட்டமைக்க வேண்டிய தொடக்க வேலைகளை செய்யத் தொடங்கி விட்டார்கள்.

ஒன்றை மட்டும் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும், எப்பொழுதெல்லாம் பெண்களின் கைகள் இறுக்கப்பட்டதோ  அப்பொழுதெல்லாம் பாசிசத்தின் கரம் ஓங்கி உள்ளது. எப்பொழுதெல்லாம் பெண்கள் சதையாக மாற்றம் செய்யப்பட்டார்களோ அப்பொழுதெல்லாம் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் குடும்பங்களை கொண்டாடினார்களோ அவர்களால் தான் பல லட்சம் குடும்பங்கள் சிதைந்து போயுள்ளன.

ஆதலால் பெண் விடுதலை என்பது பெண்களுக்கான விடுதலை மட்டுமன்று பெண் விடுதலை என்பது அனைத்து சமூக விடுதலை, ஜனநாயக விடுதலை, அரசியல் விடுதலை. பெண்களின் சிறகே ஒரு நாட்டு மக்களின் மனித முதிர்ச்சியையும் மனச் செழுமையையும் பிரதிபலிக்கும்.

ஆதலால் பெண்கள் தினம் என்பதை பெண்களுக்கான தினமாக சுருக்காமல் பெண் விடுதலையையும் அதன் முக்கியத்தையும் பரவலாக பேச வேண்டும். பெண்களை அரசியல் படுத்த வேண்டும். பெண்கள் சுயத்தை உணர்தல் மூலம் மனித இனம் தன்  சுயத்தை உணரட்டும்.

(கட்டுரையாளர் ஜெ.காவ்யா தனியார் நிறுவனத்தில் பயிற்சி பொறியாளராக பணியாற்றி வருகிறார்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்