Aran Sei

ட்விட்டரில் காணொளியைப் பகிர்ந்ததற்கு காவல்துறை வழக்கு – ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படுவதாக பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா குற்றச்சாட்டு

த்திரபிரதேசத்தில் வயதான இஸ்லாமிய முதியவர்மீதான தாக்குதல் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்கான தி வயர் இணையதளம் மற்றும் சில மூத்த ஊடகவியலாளர்கள்மீது வழக்கு பதியப்பட்டிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் (பிசிஐ) குற்றம்சாட்டியுள்ளது.

ஜூன் 5 ஆம் தேதி, உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தின் லோனி பகுதியில் தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர் முதியவர் தாக்கப்பட்டதாக தி வயர் செய்தி வெளியிட்டிருந்தது.

72 வயதான அப்துல் சமத் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அவரது தாடியை மழித்ததோடு, அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுமாறு கட்டாயப்படுத்தி அடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கபட்டிருந்தது.

”ஏற்கனவே பொது தளத்தில் இருக்கும் சம்பவங்களின் அடிப்படையில் பகிரப்பட்ட செய்திகள் மற்றும்  ட்விட்கள் எந்த வகையிலும் பொது ஒழுங்கை மீறவில்லை. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை போல வெறுப்பு மற்றும் சமூக பதட்டங்களை பரப்பவில்லை”என இந்தியப் பத்திரிகையாளர் சங்கம் (பிசிஐ) கூறியுள்ளது.

ஜூன் 15 ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு ஆல்ட்நியூஸ் இணையதளத்தை சேர்ந்த முகம்மது ஜூபைர் மற்றும் ராணா ஆயூப், தி வயர் இணையதளம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சல்மான் நிஜாமி, மஸ்கூர் உஸ்மானி, மற்றும் ஷாமா முகமது, எழுத்தாளர் சபா நக்வி மற்றும் சமூக ஊடகநிறுவனமான ட்விட்டர் இந்தியா கார்பரேஷன், ட்விட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கையைக் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

பிசிஐ தலைவர் உமாநாத் லகோரா மற்றும் பொதுச் செயலாளர் வினய் குமார் கையெழுத்திட்டிருக்கும் அறிக்கையில், ”முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது, ஊடகங்கள் மற்றும் சமூகத்தில் பயத்தை உருவாக்கக் காசியாபாத் காவல்துறையினரின் பழிவாங்கும் நடவடிக்கையை தெளிவாக காட்டுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள்மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரியுள்ள இந்தியப் பத்திரிகையாளர் சங்கம், “சுயாதீன ஊடக பிரமுகர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிரான இத்தகைய பழிவாங்கும் அரசியல் மற்றும் செயல்பாடுகளை எதிர்த்துப் பத்திரிகையாளர் அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

உண்மையான பேச்சு மற்றும் கருத்து சுதந்திர உரிமைக்கு அதரவளிப்பதாக தெரிவித்துள்ள பிசிஐ, “இந்த விவகாரத்தில் உத்திரபிரதேச அரசு தலையிட்டு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதோடு, ஊகடவியலாளர்கள் காவல்துறையினர் மற்றும் உயர்பொறுப்புகளில் இருப்பவர்களின் எளிதான இலக்கு ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்