முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக இந்துத்துவா தலைவர் யதி நரசிங்கானந்த் மீது மகாராஷ்ட்ராவின் அகமது நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பேசிய யதி நரசிங்கானந்த், ”இந்தியாவின் அணுகுண்டு பார்முலாவை அப்துல் கலாம் பாகிஸ்தானிற்கு விற்றுவிட்டார். அவர் தான் முதன்மையான தீவிரவாதி” என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நரசிங்கானந்த் மீது வழக்கு பதிவு செய்யுமாறு, அர்ஷித் ஷேக், பஹிர்நாத் வகாலே, ஆனந்த் லோகண்டே ஆகியோர் அகமது நகர் நீதிமன்றத்தில், ஜூலை 23, 2021 தேதி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் யதி நரசிங்கானந்த் மீது வழக்கு பதிவு செய்யுமாறு அகமது நகர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து நரசிங்கானந்த் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்), 153 பி (குற்றச்சாட்டுகள், வலியுறுத்தல்கள், தேசிய ஒருங்கிணைப்பு), 295 ஏ (திட்டமிட்டு மற்றும் தீங்கிழைக்கும் வேலைகளில் ஈடுபடுதல், எந்த வகுப்பினரின் மத உணர்வுகளையோ அல்லது மத நம்பிக்கைகளையோ அவமதிப்பதன் மூலம் சீற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது) மற்றும் 505 (பொதுக் அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்து வகையில் பேசுதல்) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
2001 ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவிற்கும் அப்துல் கலாமிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய நரசிங்கானந்த் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக அப்துல் கலாம் இருந்தபோது, பல்வேறு இந்து தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.