Aran Sei

‘விவசாயிகள் போராட்டத்தை வன்முறையால் கலைப்பேன்’ – இந்துத்துவா ஆதரவாளர் மீது வழக்கு

ந்துத்துவா ஆதரவாளரான ராகினி திவாரி என்பவர், விவசாயிகளின் போராட்டத்தை வன்முறையால் முடிவுக்குக் கொண்டுவருவேன் என பகிரங்கமாக மிரட்டியுள்ளார். விவசாயிகளை மிரட்டும் இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. இதை தொடர்ந்து அவர் மீது டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது.

“டிசம்பர் 17 ஆம் தேதிக்கு தயார் ஆகுங்கள் என்று சகோதரிகள் ஆகிய உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் ஒரு காணொளியில் கூறியுள்ளார். “டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை அரசு தடுத்து நிறுத்தவில்லை என்றால், மீண்டும் ஜஃப்ராபாத்தை உருவாக்குவேன். என்ன நடந்தாலும் மத்திய, மாநில அரசு மற்றும் டெல்லி காவல்துறை தான் பொறுப்பாகும்” என்று அந்தக் காணொளியில் ராகினி திவாரி கூறியுள்ளார்.

ஜஃப்ராபாத், வட கிழக்கு டெல்லியின் ஒரு பகுதியாகும். அங்கு, கடந்த ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. பிப்ரவரி மாதம், காவலர்கள் முன்னிலையில், “இந்தப் போராட்டத்தைக் கலைக்க வேண்டும் இல்லை என்றல் நானும் என் ஆதரவாளர்களும் இதை கலைப்போம்” என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் கபில் மிஸ்ரா இதேபோல் தெரிவித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, ‘ஜான்கி பெஹன்’ என்று அழைக்கப்படும் ராகினி திவாரிக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153ன் (கலகத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோபமூட்டுதல்) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்கு டெல்லி கலவரத்திலும் அவருக்குப் பங்கு உள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளியூரில் இருக்கும் ராகினி, வரும் நாட்களில் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

“வன்முறைச் சூழலை” உருவாக்கியதற்காக ராகினி திவாரிக்கு எதிராகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள அதே நேரத்தில், கபில் மிஸ்ரா சுதந்திரமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்று தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்