Aran Sei

தேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கான ஆயத்தங்கள் தொடங்குகின்றன – மீண்டும் குடியுரிமை பிரச்சினை?

க்கள் தொகை கணக்கெடுப்புக்கும் தேசிய மக்கள் பதிவேட்டுக்குமான கள முன்னோட்டங்களை விரைவில் நடத்துவதற்கு “இந்திய தலைமை பதிவாளர்” தயாரித்து வருவதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முன்னோட்டம் அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும், மொபைல் செயலி மூலம் நடத்தப்படும் என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தி ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார். கணக்கெடுப்பவர்களில் பலர் இளம் பள்ளி ஆசிரியர்கள் என்பதால், காகிதத்தை பயன்படுத்தி இல்லாமல், மொபைல் செயலி பயன்படுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 முதல் 60 வீடுகளில் இந்த கணக்கெடுப்பு முன்னோட்டம் நடத்தப்படும்.

வீடுகளை கணக்கெடுப்பதற்கும் பட்டியலிடுவதற்கும் 31 விபரங்களை திரட்டும்படி இந்திய தலைமை பதிவாளர், ஜனவரி 9, 2020 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தக் கேள்விகளில் – பதில் சொல்பவர் வீட்டில் சமையல் வாயு இணைப்பு உள்ளதா, வானொலி, டிரான்சிஸ்டர், தொலைக்காட்சி, மடிக்கணினி, மேசைக் கணினி, தொலைபேசி, மொபைல், ஸ்மார்ட் தொலைபேசி ஆகியவை உள்ளனவா, இணைய இணைப்பு உள்ளதா ஆகிய கேள்விகள் அடங்கும்.

தேசிய மக்கள் பதிவேட்டுக்கு திரட்டப்படும் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், 2019-ல் நடத்தப்பட்ட முன் சோதனையில், அப்பா அம்மா ஆகியோரின் பிறப்பிடம் பிறந்த தேதி, கடைசியாக வசித்த இடம், தாய்மொழி, ஆதார் எண் (விரும்பினால்), வாக்காளர் அடையாள அட்டை, மொபைல் எண், ஓட்டுனர் உரிம எண் ஆகியவை கேட்கப்பட்டன.

இந்தக் கேள்விகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கவலை தெரிவித்திருந்தன என்று தி ஹிந்து செய்தி கூறுகிறது.

2010-லும், 2015-லும் தேசிய மக்கள் பதிவேட்டுக்கு 14 விபரங்கள் திரட்டப்பட்டன. அதில் 119 கோடி குடிமக்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் பதிவேடு கணக்கெடுப்பை பல மாநிலங்களும் குடிமை அமைப்புகளும் எதிர்த்தன. ஏனென்றால், குடியுரிமை விதிகள் 2003-ன் கீழ், அது இந்திய குடிமக்களின் தேசிய பதிவேட்டுடன் (NRIC) அல்லது குடிமக்களின் தேசிய பதிவேட்டுடன் (NRC) இணைக்கப்படுகிறது.

2019-ம் ஆண்டில் மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) முஸ்லீம்களை குடியுரிமை பெறுவதிலிருந்து விலக்கி வைக்கிறது. அதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆவணங்கள் இல்லாதவர்கள் இஸ்லாமியர்கள் அல்லாதவராக இருந்தால், இந்திய குடியுரிமை கோரலாம்.

முஸ்லீம்களை விலக்கி வைக்கும் அந்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டங்களின் போது 69 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “காலவரிசையை புரிந்து கொள்ளுங்கள். முதலில் குடியுரிமை சட்ட மசோதாவை கொண்டு வருவோம். அதன் பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவோம். தேசிய குடிமக்கள் பதிவேடு வங்காளத்துக்கு மட்டும் இல்லை, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்” என்று பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு [முஸ்லீம் அல்லாதவர்களுக்கு] குடியுரிமை வழங்கப்படும். எனவே, அகதிகள் கவலைப்பட வேண்டாம். ‘ஊடுருவியவர்கள்’ தப்பிக்க முடியாது” என்றும் அவர் கூறியிருந்தார்.

எனவே, இந்தியாவில் குடியுரிமை தொடர்பாக, அரசு வரையறுக்கும் ஆவணங்கள் (பெற்றோரின் பிறந்த இடம் தேதி முதலியன) இல்லாதவர்களில், முஸ்லீம்களுக்கு மட்டும் குடியுரிமையை மறுக்க பாஜக திட்டமிடுவது தெளிவானது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்