தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முப்தி உள்ளிட்ட குப்கர் கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஜூன் 24 ஆம் தேதி தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளனர்.
இன்று (ஜூன் 22), காலை 11 மணிக்கு, ஸ்ரீநகரில் உள்ள ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் நடந்த குப்கர் கூட்டணியின் கூட்டத்தில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவாமி தேசிய மாநாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கம் உட்பட அதன் ஐந்து கட்சிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஃபரூக் அப்துல்லா, “நாங்கள் பிரதமரிடமிருந்து இந்த அழைப்பைப் பெற்றுள்ளோம். அதில் நாங்கள் கலந்து கொள்ளப் போகிறோம். எங்கள் நிலைப்பாட்டை பிரதமர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சரிடம் வைப்போம். பின்னர் பிரதமரின் பதில் குறித்து மக்களுக்கு அறிவிப்போம்.” என்று கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்
முன்னதாக, பிரதமருடனான கூட்டத்தில் கலந்து கொள்ள கூட்டணியின் சார்பாக ஃபரூக் அப்துல்லாவை மெஹபூபா முப்தி நியமிப்பார் என்ற ஊகங்கள் இருந்தன. ஆனால், குப்கர் கூட்டணி தலைவர்கள் அவரை சமாதானப்படுத்திய பின்னர் அவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இக்கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மெஹபூபா முப்தி, “இக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளாமல் மற்றவர்களை துன்பப்படுத்த விரும்பவில்லை. இதற்கு ஒரு தடையாக இருக்கவும் விரும்பவில்லை. இந்த பேச்சுவார்த்தை நடவடிக்கைகளை இழக்க நான் விரும்பவில்லை. ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்லாமல், முழு பிராந்தியத்திலும் அமைதியை நிலைநாட்ட வேண்டிய அவசியம் உள்ளது.” என்று கூறியுள்ளார்.
“நம்முடைய அரசு தோஹாவில் தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஒரு முடிவை எட்ட வேண்டுமானால், ஜம்மு காஷ்மீர் மக்களுடனும், பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாக வேண்டும்.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அந்தஸ்த்தை திரும்பப் பெறும் கோரிக்கை குறித்து கூறுகையில், “கால்களை வெட்டியபிறகு ஒரு ஷூவை வழங்குவது எப்படி அன்பளிப்பாகாதோ அதேபோல, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்த்தை திரும்பத் தருவது அன்பளிப்பல்ல.” என்று மெஹபூபா முப்தி குறிப்பிட்டுள்ளார்.
source; thehindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.