Aran Sei

‘ஜனநாயகம் வெறும் ஏட்டில் மட்டுமே உள்ளது’ – மெஹ்பூபா முஃப்தி

ம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முஃப்தியும் பாரூக் அப்துல்லாவும், தங்கள் கூட்டணி மீதான மத்திய அரசின் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி உள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கு ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக அப்பிராந்தியத்தைச் சேர்ந்த ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, ‘குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டமைப்பு’ எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா, ‘குப்கர் கூட்டணியின்’ கூட்டத்தை நடத்துவதற்காக ஜம்முவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது பேசிய மெஹ்பூபா, “அனைத்தும் சரியாகவும் இயல்பாகவும் உள்ளது என்று மத்திய அரசு கூறுகிறது. சரியாக இருந்தால் அவர்கள் ஏன் எங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“ராணுவத்தையும் காவல்துறையையும் பயன்படுத்தி எங்கள் போராட்டங்களைத் தடுக்குறீர்கள். ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும். நிலச் சட்டங்களுக்கு எதிராக அமைதியான போராட்டங்களை நடத்தியதற்காக எங்கள் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

”மக்களின் குரவளையை நசுக்கினாள் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்றும் மெஹ்பூபா எச்சரித்துள்ளார்.

“மக்களின் சக்தி மிகப் பெரியது. அரசபலத்தைப் பயன்படுத்தி அவர்களை அமைதியாக்க முடியாது. உங்களால் எவ்வாறு மக்களின் விருப்பத்திற்கு எதிரான முடிவுகளை எடுக்க முடிகிறது? இப்போது, ஜனநாயகம் வெறும் ஏட்டில் மட்டுமே உள்ளது” என கூறியுள்ளார்.

“370 வது பிரிவு ரத்து செய்யப்படுவதை ஆதரித்தவர்கள் ‘நாளை வருந்துவார்கள்’. இவர்கள் அரசியலமைப்பை பின்பற்றவில்லை. நாடு முழுவதும், பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது” என்று மெஹ்பூபா தெரிவித்துள்ளார்.

“சீனாவின் ஆதரவுடன் ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு மீட்டமைக்கப்படும்” என்று பாரூக் அப்துல்லா தெரிவித்தார். இந்தக் கருத்துக்களுக்காக அவரை சிலர் ‘தேச துரோகி’ என்று விமர்சித்தனர்.

இந்த விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள பாரூக் அப்துல்லா, “தங்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்று அவர்கள் நினைத்தால், அதை எல்லைகளில் உள்ள எதிரிக்கு ஏன் காட்டவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீநகரைக் காப்பாற்றுவதற்காக, 1947-ல் எங்கள் கட்சி, பழங்குடியினரை எதிர்த்துச் சக்தியைக் காட்டியது மட்டுமல்லாமல் அவர்களை எதிர்கொள்ளவும் செய்தோம். இப்போது, ​​பாரூக் அப்துல்லா ஒரு பாகிஸ்தான் காரனாகவும், சீனா காரனாகவும் மாறிவிட்டான்” என்று அவர் கூறியுள்ளார்.

“நான் எவரையும் கண்டு அஞ்சவில்லை” என்றும் “ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைக்காகப் போராடுவேன்” என்றும் பாரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவைத் திருத்தம் செய்த பின்னர், ஜம்முவில் இவர்கள் கலந்துகொள்ளும் முதல் அரசியல் கூட்டம் இதுவாகும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்