Aran Sei

’டெல்லி குடியரசு தின டிராக்டர் பேரணி தடைகளை தாண்டி நடக்கும்’ : விவசாய சங்கங்கள் திட்டவட்டம்

புதிய விவசாய சட்டங்களை நீக்கக் கோரி, வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று நடப்பதாக அறிவிக்கப்பட்ட டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெற கோரி, 50 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில், வரும் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தன.

போராட்டத்திற்கு தீவிரவாத அமைப்புகளில் இருந்து நிதி – விவசாயிகள் தலைவருக்கு என்ஐஏ சம்மன்

நேற்று (ஜனவரி 17) இந்த டிராக்டர் பேரணி தொடர்பாக மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, “புதிய விவசாய சட்டங்களுக்கு பெரும்பாலான விவசாயிகள் ஆதரவாக உள்ளனர். நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில், சட்டங்களில் தங்களுக்கு பாதகமாக உள்ள அம்சங்களை விவசாயிகள் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம். ஆகவே, விவசாயிகள் தங்கள் பிடிவாதப் போக்கை கைவிட வேண்டும்.” என்று தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மறுபுறம், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது அவர்கள், “விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு பல முறை முயற்சித்தது. அது பலனளிக்கவில்லை. அதனால், அராஜக வழியை அரசு தற்போது தேர்ந்தெடுத்துள்ளது. என்ஐஏ, அமலாக்கத் துறை விசாரணைகள் மூலம் விவசாயிகளை பணிய வைத்துவிடலாம் என்று அரசு நினைக்கிறது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது.” என்று கூறியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மாநில,மாவட்ட தலைநகரங்களில் டிராக்டர் பேரணி – விவசாய சங்கங்கள் அறிவிப்பு

வரும் குடியரசு தினத்தன்று மிக அமைதியான முறையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் எத்தகைய தடைகள் வந்தாலும் இந்தப் பேரணியை நடத்திக்காட்டுவோம் என்றும் விவசாய சங்கங்கள் உறுதிபட கூறியுள்ளன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்