Aran Sei

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு – மத்திய அரசு திடீர் அறிவிப்பு

த்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற  வலியுறுத்தி, டெல்லி எல்லைகளில் கடந்த ஐம்பது நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுடன், விவசாயிகள் நடத்திய ஒன்பது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தன. இந்நிலையில், மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையில் இன்று (19.01.21) பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார்.

நேற்று, டெல்லி புறப்படும் முன், குவாலியரில் செய்தியாளர்களிடம் பேசிய தோமர் “சட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரிவுகள் குறித்து பேசுவதற்கு விவசாய சங்கங்கள் தயாராக இல்லை. அதனால்தான் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. நாளை, மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. விவசாய சங்கங்கள் (சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பதற்கு பதிலாக) வேறு முடிவுக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்” என கூறியதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணியை கைவிட வேண்டும் என்றும் தோமர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “26ஆம் தேதி நம்முடைய குடியரசு தினம். நம் நாடு, பல்வேறு தியாகங்களுக்குப் பிறகு சுதந்திரம் பெற்றுள்ளது. குடியரசு தினத்தின் கண்ணியத்தை காக்க வேண்டியது, விவசாயிகளின் கடமை. அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலினை செய்வார்கள் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறியதாக தி இந்து தெரிவிக்கிறது.

இந்நிலையில் நேற்றிரவு, குவாலியரிலிருந்து டெல்லி திரும்பிய தோமர், நாளை (செவ்வாய்கிழமை) நடைபெற இருந்த பேச்சுவார்த்தை, புதன்கிழமைக்கு (20.01.21) ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணங்களால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய விவசாய அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்