Aran Sei

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த ஹரியானா அரசு – பங்கேற்க மறுத்த விவசாயிகள் சங்கம்

ரியானா – டெல்லி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து தொடர்பாக உச்சநீதிமன்ற அளித்த உத்தரவின் பேரில் பேச்சுவார்த்தை நடத்த ஹரியான அரசு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள் சங்கம், பேச்சுவார்த்தையைப் புறக்கணித்துள்ளது.

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெறுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைதியான முறையில் போராடுவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உள்ளது எனக் கூறியதோடு, பிரச்னைக்குத் தீர்வு காணுமாறு  (நெடுஞ்சாலை அடைக்கப்பட்டது) ஹரியானா, உத்திரபிரதேச மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசை அறிவுறுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட குழு ஒன்றை அமைத்த அரசு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக ஹரியானா அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில், ”உயர்மட்ட குழுவின் உறுப்பினர்கள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். 43 விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஹரியான உள்துறை அமைச்சர் அணில் விஜ், “ஹரியான உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராஜீவ் அரோரா தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மூத்த காவல்துறை அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

”உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் நெடுஞ்சாலை அடைப்பட்டிருப்பதால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சம்யுக்ட் கிசான் மோர்ச்சாவுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு முடிவு செய்துள்ளது” என ராஜீவ் அரோரா கூறியுள்ளார்.

”ஹரியானா அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என அனைத்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டதை போல நெடுஞ்சாலையில் ஒரு பகுதியைக் காலியாக விட்டுள்ளோம்” என விவசாயிகள் சங்க தலைவர் மஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தேசிய நெடுஞ்சாலை எண் 44ல், சிங்கு – குண்டலினி எல்லையைக் காலி செய்வது தொடர்பாக, விவசாயிகள் சங்கத்தினரில் ஒரு பகுதியினருடன் சோனிபட் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்