Aran Sei

‘தேசம் விற்கப்படுவதை தடுப்போம்; பாஜகவை தோற்கடிப்போம்’ – விவசாய சங்கங்கள் தீர்மானம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் உத்தரபிரதேச மாநிலம் முசாபர் பகுதியில் மிகப்பெரும் அளவிலான மகாப்பஞ்சாயத்துக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

மேலும், வரவிருக்கும் மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிக்கும் வகையில் விவசாயிகள் தீர்மானம் இயற்றியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, “குறைந்த அளவிலான விவசாயிகள் மட்டுமே போராடுவதாக ஒன்றிய அரசு கூறுகிறது. அனால், சில விவசாயிகள் எவ்வாறு போராடுகிறோம் என்பதை அரசு பார்க்கட்டும். நாங்கள் இப்போது எழுப்பும் குரல் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பவர்களின் காதுகளை எட்ட வேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.

இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகைத், “ஒருவேளை அரசு எதாவது உணர்ந்தால் நலம். இது போன்றக் கூட்டம் நாடுமுழுதும் நடத்தப்படும். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் வகையில் இந்த தேசம் விற்கப்படுவதிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டும்”. என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்துக்கு எதிராக நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, வரும் செப்டம்பர் 27 அன்று நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, “லட்சக்கணக்கான விவசாயிகள் முசாபர் நகர் பகுதியில் போராடுவதற்காகக் கூடியுள்ளனர். அவர்கள் நம் ரத்தமும் சதையுமானவர்கள். நாம் கண்ணியமான முறையில் மீண்டும் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடத் தொடங்கவேண்டும்” என்றும் கூறியுள்ளார்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்