Aran Sei

‘நாங்கள் ஆக்சிஜன் வாகனங்களை தடுக்கவில்லை. சாலைகளில் ஆணித் தடுப்பு போட்டிருப்பது அரசுதான்’ : விவசாயிகள்

டெல்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து வரும் வாகனங்களை போராடும் விவசாயிகள் தடுக்கின்றனர் என்பது பொய் பிரச்சாரம் என்றும் ஆணிகளை வைத்து பல அடுக்கு தடுப்புகளை போட்டிருப்பது அரசுதான் என்றும் போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 20) இரவு, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஸ் வர்மா, டெல்லிக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து வரும் வாகனங்களை போராடும் விவசாயிகள் தடுக்கின்றனர் என்றும் அதனால், ஆக்சிஜன் சிலிண்டர்களை டெல்லிக்கு எடுத்து வரமுடியவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சா, இக்குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடக்கும் மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் இல்லையா?: விவசாய சங்கத்தினர் கேள்வி

அதில்,  “ஆம்புலன்சையோ அல்லது அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்களையோ நாங்கள் தடுக்கவில்லை. ஆணிகளை வைத்து பல அடுக்கு தடுப்புகளை போட்டிருப்பது அரசுதான்.  மனித உரிமைகளுக்குதான் விவசாயிகள் போராடுகின்றனர். ஒவ்வொரு மனிதனின் உரிமைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “போராடும் விவசாயிகளுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. போராட்டத்தின் முதல் நாளில் இருந்தே அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்களுக்கு வழிவிட்டுதான் போராடுகிறோம். விவசாயத்துறையில் மத்திய அரசு எடுத்திருக்கும் பாரபட்சமான கொள்கைகளுக்கே எதிராக போராடுகிறோமே அன்றி, கொரோனா நோயாளிகளுக்கும் பொது மக்களுக்கும் எதிராக நாங்கள் போராடவில்லை.” என்று  அவ்வறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்