Aran Sei

பெண் விவசாயிகளின் இன்குலாப் மருதாணி – ‘மகளிர் தின வாழ்த்து சொன்ன பிரதமருக்கு போராடும் எங்கள் குரல் கேட்கவில்லையா?’

கேரளாவைச் சேர்ந்த தலித் உரிமைகள் மற்றும் மகளிர் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் பிந்து அம்மினி, சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி டெல்லி எல்லையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

நேற்று (மார்ச் 8), டெல்லி எல்லையில் உள்ள காசியாபாத் போராட்டக்களத்தில் பிந்து அம்மினி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, “மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றுதான். சர்வதேச பெண்கள் தினத்தன்று, பெண்களை குறைத்து மதிப்பிடாதீர் என்பதுதான் எங்களுடைய செய்தி. இப்போராட்டத்திற்காக சாதி, மதம், மொழி ஆகிய வேற்றுமைகளை உடைத்து இங்கே ஒன்றிணைந்துள்ளோம். இது மிக முக்கியமான பிரச்சினை. உடனே தீர்க்கப்பட வேண்டும்.” என்று அவர் கூறியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்ட களத்தில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் – மேடையேறி உரை நிகழ்த்திய பெண் விவசாயிகள்

முழுக்க பெண் விவசாயிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டக் களத்தில் உத்திரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கைகளில், “இன்குலாப் ஜிந்தாபாத்”, “கிசான் ஏக்தா ஜிந்தாபாத்” (விவசாயிகளின் ஒற்றுமை நீடூழி வாழ்க) என்று மருதாணியால் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஹாப்பூரைச் சேர்ந்த பாரதிய கிசான் யூனியனின் உறுப்பினர் பப்லி சிங், “இது இன்குலாப் மெஹந்தி. பெண்கள் மெஹந்தியை அழகுபடுத்தலுக்கு மட்டுமல்லாமல் புரட்சியை கொண்டுவரவும் பயன்படுத்துவோம் என்ற செய்தியை தெரிவிக்கிறோம். மகளிர் தினத்தன்று பிரதமர் பெண்கள் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக சாலைகளில் போராடிக் கொண்டிருக்கும்போது எங்கள் குரல்கள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

தலையில் சுமைகளுடன் போராட்ட களத்தில் திரளும் பெண்கள் – விவசாயிகள் போராட்டத்தின் மற்றொரு மையமாகும் மும்பை

மேலும், போராட்டம் தொடங்கிய நாள் முதல் களத்திலிருப்பதாக கூறும் பப்லி சிங்,  “டெல்லி எல்லைகளில் போராடி வரும் பெண்கள் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இயற்கை உபாதைகளுக்கும், குளியலுக்கும் போதுமான இடவசதி இல்லை. சாலையோர கூடாரங்களில்தான் பெண்கள் உறங்குகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்