மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் இன்று (மார்ச் 6) 100 வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்றைய தினத்தைக் கருப்பு தினமாக கடைபிடிக்க விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
அதையொட்டி, குண்ட்லி-மானேசர்- பல்வால் ஆகியவற்றை இணைக்கும் கேஎம்பி அதிவிரவு நெடுஞ்சாலையை, காலை 11 மணி முதல் மாலை 3 மணிவரை, நான்கு மணி நேரம் முடக்கவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய விவசாயி சங்கத் தலைவர் தீராஜ் சிங், “எங்கள் மறியல் போராட்டமானது அமைதியான முறையில் நடைபெறும். எந்தவொரு தனிநபருக்கோ பொதுச்சொத்துக்களுக்கோ ஆபத்து ஏற்படாது. கேஎம்பி அதிவிரைவு நெடுஞ்சாலையில், காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணிவரை சக்கா ஜாம் (சாலை முடக்கும்) நடத்தவுள்ளோம். மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிரான இந்த முடக்கம், எங்கள் தீவிர எதிர்ப்பின் அடையாளமாகும். இந்தச் சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று இந்தியா டுடே தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கேஎம்பி அதிவிரைவு நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.
சுட்டெரிக்கவுள்ள கோடை – போராட்டக் களத்தில் முன்னேற்பாடுகளை செய்யும் விவசாயிகள்
விவசாயிகள் போராட்டம் நூறாவது நாளை எட்டியது குறித்து பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், “தேவைப்படும் வரை போராட்டத்தைத் தொடரத் தயாராக இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் வரை நாங்கள் இங்கிருந்து செல்லமாட்டோம்.” என்று கூறியுள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.