விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி, நாடு முழுவதும் நான்கு மணிநேர ரயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த மாதத்திற்கான தங்களுடைய போராட்ட திட்டங்களை வெளியிட்ட போராடும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த கிசான் மோர்ச்சா, நாளை (பிப்ரவரி 12) முதல் ராஜஸ்தானில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் கைப்பற்றி, வாகனங்களைக் கட்டணமின்றிச் செல்ல அனுமதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“பிப்ரவரி 14-ம் தேதி அன்று, புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், மெழுகுவர்த்திகளையும் கைவிளக்குகளையும் ஒளிரவிட்டபடியே பேரணிகள் நாடு முழுவதும் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், சுதந்திர போராட்ட களத்தில் இருந்த விவசாயத் தலைவர்களில் ஒருவரான சர் சோட்டு ராமினின் பிறந்த நாள் விழா முன்னெடுக்கப்படும்.” என்று திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ள அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை வெளியீட்டின்போது பேசிய கிரந்திகாரி கிசான் யூனியனின் தலைவரான தர்ஷன் பால், “பிப்ரவரி 18-ம் தேதி நன்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்.” என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
கிசான் ஏக்தா மோர்ச்சா அமைப்பு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் , பாரதிய கிசான் சங்கர்ஷ் சமிதியின் ஹரியானா மாநிலத் தலைவர் விகாஸ் சிசார் பேசியுள்ளார்.
டிராக்டர் பேரணி வன்முறை – காணாமல் போனவர்களை காவல் நிலையங்களில் தேடும் விவசாயிகள்
அதில், “இன்று நடைபெற்ற கூட்டத்தில், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூர வேண்டும் என்று முடிவெடுத்தோம். வரும் பிப்ரவரி 14-ம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்தி பேரணிகள் நடத்தவுள்ளோம். இதன் வழியாக, உண்மையான மாலிக்குகள் (உரிமையாளர்கள்) போர் வீரர்களும் விவசாயிகளும்தான் என்பதை, அன்றைய தினம் நம் நாட்டு மக்கள் அறிந்து கொள்வார்கள்.” என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.