Aran Sei

விவசாயிகள் போராட்டம் குறித்த வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை

Image Credits: India Legal

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு, ஜனவரி 19ஆம் தேதியன்று, முதல் முறையாக கூடுவது உறுதி என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஷேத்காரி ஷன்கதன் அமைப்பைச் சேர்ந்த அனில் கன்வாத் “நாங்கள் ‘புசு வளாகத்தில்’ (டெல்லி) ஜனவரி 19ஆம் தேதி சந்திக்கவுள்ளோம். நாங்கள் என்ன செய்வது என்பது குறித்து குழுவின் உறுப்பினர்கள் மட்டும் முதல்கட்டமாக விவாதிக்கவுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம்பெற்றிருந்த, பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த புபிந்தர் சிங் மான், ஏற்கனவே அந்த குழுவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

‘நீதிமன்றத்தை நாங்கள் நம்பவில்லை’ – ‘இங்கிருந்து ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்’ – விவசாயிகள் உறுதி

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான், ஒரு விவசாயியாகவும் விவசாய சங்க தலைவராகவும் செயல்பட்டு வருகிறேன். பொதுமக்களிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் கருத்துக்களுகு மதிப்பளித்து, பஞ்சாப் மற்றும் தேசத்தில் உள்ள விவசாயிகளின் நலன்களில் சமரசம் ஏற்படாமல் எனக்கு வழங்கப்படும் எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நான் இந்த குழுவிலிருந்து விலகுகிறேன், நான் எப்போதும் எனது விவசாயிகள் மற்றும் பஞ்சாபுடன் நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், போராடும் விவசாயிகள், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆகவே, அந்த குழுவோடு பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள அனில் கன்வாத், (அவர்கள் வரவில்லையென்றால்) போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று, அவர்களோடு (விவசாயிகளோடு) பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

‘உச்சநீதிமன்றம் ஏமாற்றி விட்டது’ – போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவிப்பு

உச்சநீதிமன்றம் குழு அமைத்துள்ள நிலையில், மத்திய அரசு விவசாயிகளிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனில் கன்வாத், “அதன் மூலம் போராட்டம் முடிவுக்கு வந்தால் தங்களுக்கு மகிழ்ச்சியே” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், பேராடும் விவசாயிகளை டெல்லி எல்லைகளிலிருந்து அகற்றக்கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்கள், நாளை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்