Aran Sei

விவசாயிகளை தாக்கியதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு – கைது செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம்

பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராம் சந்தர் ஜங்ரா விவசாயி ஒருவரை தாக்கி காயப்படுத்தியதற்காக அவர்மீது வழக்கு பதிய வலிறுத்தி, ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள நர்னவுண்ட் காவல் நிலையத்திற்கு வெளியே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (நவம்பர் 6), இரவு தொடங்கி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டம் குறித்து, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள உள்ளூர் விவசாயிகள் தலைவர் ரவி ஆசாத், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சந்தர் ஜங்ராவும் அவரது கூட்டாளிகளும் குல்தீப் ராணா என்ற விவசாயியைத் தாக்கி பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தாக்குதல் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது கூட்டாளிகள்மீது வழக்கு பதிந்து, கைது செய்யுமாறும் காவல்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 3 விவசாயிகள் மீதான வழக்குகளையும் திரும்ப பெறக்கோரி வருகின்றனர்.

அரசியலோ அரசியல் – காமராசர் முதலமைச்சரான கதை

“எங்கள் கோரிக்கைகள் மிகவும் தெளிவாக உள்ளன. குல்தீப் ராணாவை தாக்கிய பாஜக எம்பி ராம் சந்தர் ஜங்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். மேலும், மூன்று விவசாயிகள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்” என்று ரவி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.

“மருத்துவமனையில் குல்தீப் ராணாவுக்கு நான்கு மணி நேரம் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா, நர்நாவுண்ட் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. விவசாயிகள் நேற்று முன்தினம் முதல் இங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதிய கிசான் யூனியனின் செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத், “தனியார் அடியாட்கள் வரத் தொடங்கியுள்ளனர். தற்போது, ​​காவல்துறையினர் தடிகளைப் பயன்படுத்தவில்லை. மாறாக, இவர்கள்தான் வருகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்