Aran Sei

சர்க்கரை ஆலையை திறக்க இருந்த அஜய் மிஸ்ரா – ராகேஷ் திகாயத்தின் எதிர்ப்பால் பின்வாங்கியது மாவட்ட நிர்வாகம்

பாரதிய கிசான் யூனியன் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத்தின் எச்சரிக்கையை அடுத்து, லக்கிம்பூர் கேரியில் உள்ள இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாகம், கரும்பு அரைக்கும் பருவத்தின் தொடக்க விழாவில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகையை தவிர்த்துள்ளது.

நவம்பர் 22 ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள ராகேஷ் திகாயத், லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா தொடங்கி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சக்கரை ஆலை குறித்து பேசுவையில், “அஜய் மிஸ்ரா சக்கரை ஆலையைத் தொடங்கி வைத்தால், எந்தக் கரும்பும் ஆலைக்கு செல்லாது. மாறாக, மாவட்ட நீதிபதியின் அலுவலகத்திற்கு கரும்புகளை விவசாயிகள் எடுத்து செல்வார்கள். இதனால், விவசாயிகளுக்கு எவ்வளவு நஷ்டம் ஆனாலும் பரவாயில்லை” என்று கூறியிருந்தார்.

‘விவசாயிகளைக் கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகனும் தீவிரவாதிதான்’ – ராகேஷ் திகாயத்

அக்டோபர் 3 அன்று, லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறையில், நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில், ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என்ற மோனு குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர் ஆவார். ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு, தற்போது லக்கிம்பூர் கெரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று(நவம்பர் 24), இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் பொது மேலாளர் கூறுகையில், “லக்கிம்பூர் கெரி மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள் முன்னிலையில், காலை 9 மணிக்கு பெல்ராயனில் உள்ள சர்ஜு கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் காலை 11 மணிக்கு சம்பூர்ணா நகரில் உள்ள விவசாயிகள் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலும் அரைக்கும் பருவத்தை தொடங்கி வைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்