Aran Sei

‘துரோக தினம்’: ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

விவசாயம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளில் ஒன்றிய அரசு துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி, ‘துரோக தினம்’ அனுசரிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை வலியுறுத்தி, 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற ஒருங்கிணைந்த குழுவின் கீழ் டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தின.

விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் மோடி கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும் சட்டப்பூர்வமாக திரும்பப் பெறப்பட்டன. அதனையடுத்து, டிசம்பரில் டெல்லி எல்லைகளில் இருந்த போராட்டக்களங்களை விவசாயிகள் காலி செய்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம்(ஜனவரி 30), ‘துரோக தினத்தை’ நாடு தழுவிய அளவில் கடைபிடிக்க வேண்டும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் அழைப்பு விடுத்திருந்தார்.

ஜன – 31 ஒன்றிய அரசை எதிர்த்து நாடு முழுவதும் துரோக தினம் கடைப்பிடிக்கப்படும் – ராகேஷ் திகாயத்

“விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு இழைத்த துரோகத்தால் ஜனவரி 31ஆம் தேதி நாடு தழுவிய ‘துரோக தினம்’ கடைப்பிடிக்கப்படும். டிசம்பர் 9 அன்று ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதி கடிதத்தின் அடிப்படையில் விவசாயிகளின் போராட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை” என்று அவர் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று(ஜனவரி 31), ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் உட்பட பல மாவட்டத் தலைமையகங்களிலும், முக்கிய நகரங்களிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதோடு, பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை எரித்துள்ளனர்.

இந்து, இஸ்லாம் என சமூகத்தைப் பிரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் – ராகேஷ் திகாயத்

சிகார் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், விவசாயிகள் சங்க தலைவருமான அம்ரா ராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. விவசாயிகளுடன் போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக ஒன்றிய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தின் முன் கூடி நிர்வாகத்திடம் இது தொடர்பான ஒரு மனுவை ஒப்படைத்ததாக பாரதிய கிசான் யூனியனின் காஜியாபாத் மாவட்ட தலைவர் பிஜேந்திர சிங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் உரையாற்றியுள்ள அவர், ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தின் படி விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக கைவிடப்பட்ட போதிலும், விவசாய விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என்றும், போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளுக்கு தியாகி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உத்தரப் பிரதேச அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் பிஜேந்திர சிங் கோரிக்கைகளை பட்டியலிட்டுள்ளார் .

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்